“என்னோட சைக்கிள திருடிட்டாங்கன்னு போலீஸ் ஸ்டேஷன்ல கேஸ் கொடுத்தேன். ஆனா, அவங்க இதெல்லாம் ஒரு கேஸான்னு கேக்குறாங்க. ஏன் சைக்கிள் திருடு போனா கேஸ் எடுக்க மாட்டாங்களா?” என போலீஸ் ஸ்டேஷனில் காவலர்கள் அலட்சியமாக பேசியதாக இளைஞர் ஒருவர் வெளியிட்ட வீடியோ அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு அருகே உள்ள பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நிதிஷ்குமார். இவர் சொந்தமாக சைக்கிள் ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நிதிஷ்குமாரின் வீட்டிலிருந்த சைக்கிள் திடீரென காணாமல் போனது. இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து பார்த்துள்ளனர். அப்போது, நிதிஷ்குமார் வீட்டிலிருந்த சைக்கிள் மட்டுமின்றி, பாரதியார் நகர் பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில், பகல் நேரத்தில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்ட சைக்கிள்களை மர்ம நபர் ஒருவர் நோட்டமிட்டுச் செல்கிறார். மேலும், இந்தக் காட்சிகள் முழுவதும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த நிதிஷ்குமார், இச்சம்பவம் குறித்து தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றுள்ளார்.
ஆனால், அந்தப் புகாருக்கு தெளிவான விளக்கம் தராத போலீசார், “இதெல்லாம் ஒரு கம்ப்ளைண்ட்டா சைக்கிள்தான காணாம போச்சு... இதுக்கு நாங்க நடவடிக்கை எடுக்கணுமா?” என அலட்சியமாக பேசியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த நிதிஷ்குமார், போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததை தங்களது ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, நிதிஷ்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “என்னோட சைக்கிள திருடிட்டாங்கன்னு போலீஸ் ஸ்டேஷன்ல கேஸ் கொடுத்தேன். ஆனா, அவங்க இதெல்லாம் ஒரு கேஸான்னு கேக்குறாங்க. ஏன் சைக்கிள் திருடு போனா கேஸ் எடுக்க மாட்டாங்களா? எனக்கு என்னோட சைக்கிள்தான் அத்தியாவசியமான பொருள். இன்னைக்கு சைக்கிள் காணாம போயிருக்கு. நாளைக்கு என்ன வேணாலும் திருடு போகலாம். ஆனா போலீஸ் இதுலாம் கண்டுக்க மாட்றாங்க” என நிதிஷ்குமார் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து, அலட்சியமாக பதிலளித்த போலீசார் மீது அம்மாவட்ட எஸ்.பி. தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.