நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ளது ஆணைகுடி. இப்பகுதியைச் சேர்ந்தவர் பால விவேகானந்தன். இவர் தான் பின் நாட்களில் தன் சமூக கட்டப் பஞ்சாயத்து, மிரட்டல் எனச் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டு வரும் ராக்கெட் ராஜாவாக மாறுகிறார். பால விவேகானந்தன் ராக்கெட் வேகத்தில் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டதால், அவரை ‘ராக்கெட் ராஜா’ என்ற பெயரோடு அவரது ஆதரவாளர்கள் அழைக்கின்றனர். முதலில் கராத்தே செல்வினுடன் சேர்ந்த, ராக்கெட் ராஜா 1996-ம் ஆண்டு பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் நாட்டு வெடிகுண்டு வீசினார். அதுதான் அவரது முதல் குற்றச் சம்பவம். கராத்தே செல்வின் மறைந்ததும், தன் சமூக ஆதரவாளர்களைத் திரட்டி வெங்கடேச பண்ணையாருடன் சேர்ந்தார்.
அவர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட பிறகு அவரின் தம்பி சுபாஷ் பண்ணையாருடன் சேர்ந்து பழிக்குப் பழியாக நடந்த பல சாதியக் கொலைகளுக்கு மூளையாகச் செயல்பட்டார். அதன் பின்னர், சுபாஷ் பண்ணையாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தவருக்கு திடீரென அரசியல் ஆசை ஏற்பட, ‘பனங்காட்டுப்படை’ என்ற கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். அவருடன், எந்நேரமும் சுமார் ஒன்றரை கிலோ நகைகளை மார்பிலும் கழுத்திலும் அணிந்துகொண்டு நகைக்கடையாய் வலம் வந்த ஹரி நாடாரும் சேர்ந்து கொண்டார். ராக்கெட் ராஜா மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில் கடந்த 2022 ஆம் வருடம் ஜூலை 29ஆம் தேதி நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளம் என்ற கிராமத்தில் உள்ள சாமித்துரை கொலையில் ராக்கெட் ராஜாவிற்கு தொடர்பு இருப்பதை போலீசார் விசாரணையில் உறுதி செய்தனர்.
இது கொத்தனார் செல்வகுமார் கொலைக்கு காத்திருந்து பழிவாங்க ராக்கெட் ராஜா தரப்பு செய்த கொலை சம்பவம் என கூறப்பட்டது. இதையடுத்து, உஷாரான ராக்கெட் ராஜா தலைமறைவாக இருந்த நிலையில், வெளி நாட்டிற்குத் தப்பிச் செல்வதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த போது நெல்லை மாவட்ட தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டமும் பாய்ந்தது.
இந்த நிலையில், 8 மாதத்திற்குப் பின் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலையில் ராக்கெட் ராஜா ஜாமீன் பெற்று வெளியே வந்தார். இதையடுத்து, தனது சொகுசு காரில் ஆரவாரத்துடன் ஆதரவாளர்களோடு சிறையிலிருந்து சென்றார். இதற்கிடையில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் கைதியாக இருந்த முத்து மனோ என்பவரை ஒரு கும்பல் சிறைக்குள்ளையே கற்களாலும், கம்பிகளாலும் தாக்கி கொலை செய்தது. மூன்றடைப்பு கேங்ஸ்டர் என அழைக்கப்படும் முத்து மனோ தனது சாதிக்காக காதல் விவகாரத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்து கொலை மிரட்டல் விடுத்த காரணத்தினால் போலீசார் கைது செய்திருந்தனர். இதன் காரணமாக தான் முத்து மனோ கொலை சம்பவம் நடைபெற்றது என சொல்லப்பட்டது.
அந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்து மனோ ஆதாரவாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, முத்து மனோ கொலை சம்பந்தமாக தாழையூத்தை சேர்ந்த ஜேக்கப், மாடசாமி உள்ளிட்ட ஏழு பேர் மீது பெருமாள்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், சம்பவம் நடைபெற்ற பொழுது பாளையங்கோட்டை மத்திய சிறையில் பணியிலிருந்த ஜெய்லர், துணை ஜெயிலர், தலைமை வார்டன், சிறை காவலர் உள்ளிட்ட ஏழு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், முத்து மனோ சிறையில் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய புள்ளியாக செயல்பட்ட ஜேக்கப் பற்றி விசாரணை செய்த போலீசார் பல திடுக்கிடும் தகவல்களை கண்டுபிடித்தனர். இதற்கு, ஜேக்கப்பின் மாஜி காதலி போலீசுக்கு உதவியாக இருந்ததாக கூறப்படுகிறது. காதலியுடன் நெருக்கமாக இருக்கும் சமயத்தில் காதலியிடம் பேசிய ஜேக்கப், ''நான் எப்போதும் ஏன் துப்பாக்கியோட இருக்கிறேன் தெரியுமா டார்லிங்.. ராக்கெட் ராஜா அண்ணன் கொடுத்த அசைன்மெண்ட் ஒன்னு இருக்கு..'' எனக் கூறி நெல்லையில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த முக்கியப் புள்ளியை தீர்த்து கட்டும் கதையை கூறியதாக சொல்லப்படுகிறது. இந்த ரகசிய தகவலை மாஜி காதலி போலீசுக்கு போட்டுக்கொடுக்க, இதைக்கேட்ட போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மேலும், நாங்குநேரி அருகே மஞ்சங்குளத்தில் கொலை செய்யப்பட்ட சாமித்துரை கொலை வழக்கிலும், முத்து மனோ கொலை வழக்கிலும் ஜேக்கப்புக்கு தொடர்பு இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஜேக்கப்பை கடந்த ஜனவரி 25 ஆம் தேதி குமரி மாவட்டத்தின் மார்த்தாண்டத்தில் வைத்து வள்ளியூர் டி.எஸ்.பி.யோகேஸ்குமார் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர். அவரிடம் செய்த விசாரணையில், கொலை சம்பவங்களுக்கு எல்லாம் 'வெப்பன் சப்ளையராக' செயல்பட்டது ராக்கெட் ராஜா தான் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் நீதிமன்ற அனுமதியுடன் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி ஆணைகுடியில் உள்ள ராக்கெட் ராஜா வீட்டில் சோதனை நடத்தினர். சோதனையில் வீட்டில் மான் கொம்பு, அரிவாள், துப்பாக்கி, துப்பாக்கியில் மாட்டக்கூடிய பைனாக்குலர் மற்றும் துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றினர்.
இதையடுத்து, ஜேக்கப்பின் மீது இந்திய ஆயுத தடைச்சட்டம் மற்றும் பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்துகிற வகையில் கருத்துக்களைப் பதிவிடுதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார், பாதுகாப்பு காரணமாக ஜேக்கப்பை சென்னை பூந்தமல்லி சப்-ஜெயிலில் அடைத்னர். அதனைத் தொடர்ந்து, பனங்காட்டுப்படை தலைவரும் கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்து சொகுசு காரில் சுற்றித்திரியும் ராக்கெட் ராஜாவை நெல்லை எஸ்.பி. சிலம்பரசன் தலைமையிலான இரண்டு தனிப்படையினர் கைது செய்ய தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.