பொதுமக்கள் தங்களது குடும்ப பிரச்சனை, பல்வேறு தனி நபர், சமூக பிரச்சனைக்கு போலீஸ் நிலையத்திற்கும், போலீஸ் உயரதிகாரி அலுவலகங்களிலும் நேரில் சென்று புகார் மனு கொடுத்து அதற்கான நடவடிக்கைக்காக காத்திருப்பது வழக்கமானதாக இருந்தது. இந்த நடைமுறையை மாற்றி புகார்தாரர் புகார் கொடுத்த அடுத்த நாளே அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று விசாரிக்க வேண்டும்.
இதன் மூலம் புகார் மனுக்களின் தன்மையை அதை விசாரிக்கும் போலீஸ் அதிகாரிகள் நேரில் உணர்ந்து பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணலாம் என சமீபத்தில் கூடுதல் டி.ஜி.பி. உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் சென்ற 6ஆம் தேதி முதல் வீடு தேடி புகார் மனுக்கள் விசாரிக்கும் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள 5 சப்டிவிஷன் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸ் நிலையம், எஸ்.பி, அலுவலகத்துக்கு வந்துள்ள புகார் மனுக்கள் மீது புகார்தாரர் இருப்பிடத்திற்கே சென்று போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதில், சென்ற 16 நாட்களில் மாவட்டம் முழுவதும் 300 புகார் மனுக்கள் பெறப்பட்டு, அதில் 280 மனுக்களின் மீது உடனடி தீர்வு கண்டுள்ளார்கள் ஈரோடு போலீசார்.
இது பற்றி ஈரோடு எஸ்.பி. தங்கதுரை கூறும்போது, “வீடு தேடி புகார் மனுக்கள் விசாரிக்கும் திட்டத்தின் மூலம் தற்போது வரை 300 மனுக்கள் பெறப்பட்டு அதில், 150 மனுக்களின் மீது இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் நேரடியாக சென்று புகார்தாரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அதற்கு தீர்வு கண்டார்கள். 40க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு எஸ்.பி. என்ற முறையில் நானும், ஏ.டி.எஸ்.பி.யும் விசாரணை நடத்தி தீர்வு வழங்கினோம். இவ்வாறாக 300 மனுக்களில் 280 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள புகார்கள் சிவில் சம்மந்தப்பட்ட பிரச்சனைகளாக இருப்பதால் உடனடி தீர்வு வழங்க முடியவில்லை. அதற்கு சட்ட ரீதியாக நீதிமன்றத்தின் மூலம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அவர்களுக்கு ஆலோசணை வழங்கினோம். தொடர்ந்து இந்த திட்டத்தின் மூலம் போலீசார் புகார்தாரரின் இருப்பிடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இது பொது மக்களுக்கு பயனுள்ள திட்டம்" என்றார்.