வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல்க்காக திமுக, அதிமுக, அமமுகவை சேர்ந்த நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை அனைவரும் தேர்தல் வேலை பார்த்தனர். திமுக வேட்பாளர் வீட்டில் ரெய்டு செய்ததை போல அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட புதியநீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் வீட்டில், அவர் தங்கியிருந்த ஹோட்டலில் ரெய்டு நடத்தவில்லை, இந்த தொகுதியில் மட்டும்மல்ல தமிழகத்திலேயே அதிக செலவு செய்யும் வேட்பாளராக அவர் தான் உள்ளார் என்பது குற்றச்சாட்டாக இருந்தது.
இந்நிலையில், ஏப்ரல் 15ந்தேதி ஒரு வீடியோ சமூக வளைத்தளங்களில் வெளியானது. அந்த வீடியோவில் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏவான அதிமுகவை சேர்ந்த சம்பத்குமார், ஒரு மரத்தின் கீழ் தனது கட்சி நிர்வாகிகள், பாமகவினரை அழைத்து, ஏ.சி.சண்முகம் சார்பாக ஓட்டுக்கு நாம் பணம் தரவேண்டும், அதற்கு ஒரு டீம் ரெடியாக இருக்க வேண்டும். பணம் தரும் குழுவோடு ஏ.சி.சண்முகம் ஆள் ஒருவர் வருவார். அவரை வைத்துக்கொண்டு தான் தரவேண்டும் என உத்தரவுகள் பிறப்பித்துக்கொண்டுயிருந்தார். இது பெரும் சர்ச்சையானது.
மேற்கண்ட வீடியோ வெளியான நிலையில் ஏப்ரல் 16ந்தேதி வேலூர் பாராளுமன்ற தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. இந்த வீடியோ பதிவு மீது தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது என்கிற கேள்வி பல்வேறு தரப்பில் இருந்து வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலரை நோக்கி எழுப்பப்பட்டது. அதனால் அவர் உத்தரவுப்படி வாணியம்பாடி உதவி தேர்தல் அலுவலர் சார்பில், வாணியம்பாடி காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டது.
அந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் எம்.எல்.ஏ சம்பத்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 4 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரை கைது செய்யாமல் ஆளும்கட்சி முன்னாள் எம்.எல்.ஏ என்பதால் பயந்து பதுங்கியது காவல்துறை. எப்.ஐ.ஆர் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. அந்த வழக்கில் இன்று ஏப்ரல் 24ந்தேதி வாணியம்பாடி உரிமையியல் நீதிமன்றத்தில் ஆஜரானார் சம்பத்குமார். மாலை வரச்சொன்னார் நீதிபதி. அதன்படி இன்று மாலை அந்த வழக்கில் சம்பத்குமாருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.