சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நேற்று (28/06/2023) பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இந்த நிலையில் இந்த விழாவில் தமிழக ஆளுநர் கலந்து கொள்வதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. தொடர்ந்து தமிழக அரசுக்கு எதிராகவும், தமிழக மக்களுக்கு எதிராகவும் செயல்பட்டு வருகின்ற ஆளுநர் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளக் கூடாது என வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.
இதனால் காவல்துறையினர் பாதுகாப்பிற்காக அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர். கடந்த 26 ஆம் தேதி பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட சுற்றறிக்கையில் பட்டம் பெறும் மாணவர்கள் யாரும் கருப்பு உடையில் வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த சுற்றறிக்கை மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் அனுப்பிய இந்த சுற்றறிக்கை கண்டனத்தை பெற்றது.
மாவட்ட காவல்துறையின் அறிவுறுத்தலின் பேரில் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு காவல்துறையினர் தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியது. மாவட்ட காவல் அதிகாரி சிவகுமார் நாங்கள் எங்கள் தரப்பில் எந்தவித அறிவிப்பையும் கொடுக்கவில்லை என்றும், மாநகர காவல்துறையும் இதுபோன்ற அறிவுறுத்தலை கொடுக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தனர். பெரியார் பல்கலைக்கழகம் மட்டுமே தன்னிச்சையாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது என செய்திகள் வெளியானது.
தொடர் எதிர்ப்புகளால் 27 ஆம் தேதி பெரியார் பல்கலைக்கழகம் இந்த சுற்றறிக்கையை வாபஸ் பெற்றது. இந்நிலையில் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் தற்போது சேலம் மாநகர காவல் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளது. பெரியார் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் காவல்துறையின் மாண்பைக் கெடுக்கும் முறையில் அவதூறான பொய்யான சுற்றறிக்கையை வெளியிட்ட துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் பதிவாளர் தங்கவேல் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.