கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையின் தர்மசாலைக்கு 10 டன் காய்கறி மற்றும் அரிசி, குடிநீர் பாட்டில் என இஸ்லாமியர் ஒருவர் வழங்கி வரும் சம்பவம் அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணையாக வாழ்ந்த வள்ளலார், பசித்திரு தனித்திரு விழித்திரு என்ற கொள்கையின்படி இருந்தவர். அவர் வடலூரில் அமைத்த சத்திய ஞான சபை தர்ம சாலையில், 3 வேலையும் பல்லாயிரக்கணக்கானோர் உணவருந்தி வருகின்றனர்.
இந்நிலையில், 153-வது தைப்பூச ஜோதி தரிசன விழா ஜன 25ம் தேதி நடைபெறுவதையொட்டி, கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் காய்கறி கடை வைத்துள்ள பக்கிரான் என்பவர், வள்ளலார் தர்மசாலைக்கு 10 டன் காய்கறிகள் மற்றும் 25 கிலோ கொண்ட 50 அரிசி மூட்டைகளையும், 3 ஆயிரம் குடிநீர் பாட்டில்களையும், சரக்கு வாகனம் மூலம் தர்மசாலைக்கு அனுப்பி வைத்துள்ளது கடலூர் மாவட்ட மக்கள் மற்றும் அல்லாமல் அனைத்து தரப்பு மக்களின் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கூறிய பக்கிரான், வடலூர் தைப்பூசத்தையொட்டி வள்ளலார் சபைக்கு கடந்த 20 ஆண்டுகளாக 10 டன்களுக்கு குறைவில்லாமல் காய்கறி,அரிசி மூட்டைகள் அனுப்பி வருவதாகவும், மத நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலாரின் கொள்கையையொட்டி வருடாவருடம் இந்த பொருட்களை அனுப்பி வருவதாக தெரிவித்தார்.
இஸ்லாமியரான பக்கிரான், மதங்களை கடந்து உணவுப் பொருட்களை இந்து சமய நெறி வழிபாட்டை கடைப்பிடிக்கும் வள்ளலார் சபைக்கு வழங்கி வருவது மதங்களை கடந்த மனிதம் என்று அனைவராலும் பாராட்டப்படுகிறது.