சிதம்பரம் அருகே உள்ள வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ். இவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முகாம் செயலாளராக உள்ளார். இந்த நிலையில், வரும் 29-ஆம் தேதி திருச்சியில் ‘வெல்லும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கான விளம்பர பணியில் ஈடுபட்டிருந்தபோது, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விளம்பரம் எழுதுவதற்கு எதிர்ப்பு எழுந்தது.
அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தினர் 30க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி முகாம் செயலாளர் கனகராஜை தகாத வார்த்தைகளாலும் சாதி பெயரை சொல்லியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் விளம்பரத்துக்கு அடித்த வெள்ளையில், ‘வெல்லும் ஜனநாயகம்’ மாநாடு என எழுதியதை, அதன் மீது கருப்பு பெயிண்டை கொண்டு பூசி உள்ளனர்.
எனவே இதனை அறிந்த பரங்கிப்பேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன் தலைமையில், கட்சியின் நிர்வாகிகள் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் கனகராஜை சாதி பெயரை சொல்லி இழிவாக பேசிய நபர்கள் மீது விசாரணை செய்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விளம்பரம் எழுதுவதற்காக அடிக்கப்பட்ட வெள்ளை மீது இவர்கள் கருப்பு பெயிண்டை பூசி உள்ளார்கள். ஆனால் இதே மற்ற கட்சியினர் இதேபோல் வெள்ளை அடித்தால் அதன் மீது இவர்கள் கருப்பு பெயிண்டை பூச முடியுமா? ஆனால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்தால் மட்டும் அது இவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.
மேலும் காவல் ஆய்வாளர் பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த விஷயத்தில் அவர் ஒரு தலைப்பட்சமாக நடந்துகொள்ளாமல் சரியான விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளை அடித்தது தவறு என்றால் எங்கள் மீது வழக்குப்பதிவு செய்யட்டும். ஆனால், ஒரு கட்சி விளம்பரம் எழுதுவதற்கு வெள்ளை அடித்து எழுதிய இடத்தில் கருப்பு பெயிண்டை கொண்டு அழித்துள்ளனர். இது அவர்களின் மனதில் உள்ள வன்மத்தை காட்டுகிறது. காவல்துறை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், காவல்துறையை கண்டித்து இப்பகுதியில் உள்ள அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.