
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் பாஞ்சாலி எனும் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதற்கு பக்கத்து கிராமத்தில் கோட்ட எனும் கிராமத்தில் உயர் சாதியினர் வாழ்ந்து வருகின்றனர். தொடர்ச்சியாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உயர்சாதி மக்களுக்கும் இடையே தொடர் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கரோனா ஊரடங்கு காலத்தில் பாஞ்சாலி கிராமத்தில் இருக்கும் மாந்தோப்புக்குள், கோட்ட கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சீட்டு ஆடியுள்ளனர். அப்போது அவர்களுக்கு சரக்குக்கு தேவையான சைடிஸ்ட் தேவைப்படவே, பாஞ்சாலி கிராமத்தில் இருக்கும் ராமமூர்த்திக்கு சொந்தமான மூடியிருந்த மளிகை கடையை திறக்கச்சொல்லி பிரச்சனை செய்துள்ளனர். அதற்கு ராமமூர்த்தி ஊரடங்கு காலம் என்பதால் கடையை திறக்ககூடாது என்று சொல்லியுள்ளார். அதற்கு மஞ்சு, தினேஷ், தூர்வாகன் ஆகியோர் சாதியப் பெயரைச் சொல்லி ராமமூர்த்தியை அடித்துவிட்டு கடையை கட்டையால் தாக்கியதாகவும், இதன் பிறகு அப்பகுதி மக்கள் ராயக்கோட்டை காவல் நிலையத்தில் சென்று பிரச்சனையை சொல்லியுள்ளனர். ஆனால் எந்த விதமான வழக்கும் பதிவு செய்யாமல் காவல்துறை வழக்கபோல பேசி அனுப்பியதாக கூறப்படுகிறது.
மறுநாள் காலையில் பாஞ்சாலி கிராமத்திற்கு வந்த அந்த இளைஞர்கள் எங்கள் மீது வழக்கு கொடுக்கும் அளவிற்கு உங்களுக்கு துணிச்சல் வந்துவிட்டதா, என்று சாதியப் பெயரைச் சொல்லி தங்களை தாக்கியதாக கூறி பாஞ்சாலி கிராம மக்கள் வீடியோக்களுடன் சென்று மீண்டும் காவல்துறையினரை நாடியுள்ளனர். அந்த வழக்கை எஸ்.ஐ. அருணகிரி என்பவர் கிழித்து வீசியுள்ளார். அதன் பிறகு அந்த மக்கள் காவல்நிலையத்திற்கு உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை. மேலும், எங்களுக்கு பாதுகாப்பு இல்லை, அதனால் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று அந்த மக்கள் கேட்டுள்ளனர். அதன் பிறகு மூன்று காவலர்களை அனுப்பி வைத்துள்ளனர். அடுத்தநாள் மாவட்ட எஸ்.பியை பார்க்க அக்கிராமத்து மக்கள் சென்றுள்ளனர்.
எங்களை சாதி ரீதியாக தொடர்ச்சியாக தாக்கி வருகின்றார்கள். அவர்கள் மீது ராயக்கோட்டை போலீஸாரும் சாதகமாக செயல்பட்டு வருகிறார்கள். வன்கொடுமை சட்டத்தில் அவர்களை கைது செய்யவேண்டும் என்று புகார் கொடுத்துள்ளனர். அப்பகுதி பாதிக்கப்பட்ட சிவன் பேசுகையில், " மீண்டும் அவர்கள் எப்போது எங்களை தாக்குவார்கள் என்று தெரியவில்லை, இந்த காவல்துறையும் அவர்களுக்கு சாதகமாக இருந்து வருகிறார்கள். இவர்களின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்களே ஆயுதத்தை எடுப்பதைவிட வேறு வழியில்லை" என்றார். இது தொடர்பாக ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பரமணியிடம் கேட்டபோது தொடர்பை துண்டித்துவிட்டார். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சாய்சரனிடம் கேட்டபோது, " இது தொடர்பாக நாங்கள் விசாரித்துக்கொண்டு இருக்கிறோம். அதன் தொடர்பான நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்" என்றார். கோட்ட கிராமத்தை சேர்ந்த ஊர் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், " எங்க பசங்க செய்த தவறால்தான் இந்த பிரச்சனை உருவாகியுள்ளது. பெட்டிக்கடையில் உருவான பிரச்சனை சாதி கலவரமாக மாறிவிட்டது. இந்த இரண்டு குடிகார பசங்களால்தான் இவ்வளவும் . மற்றபடி இருதரப்பினரும் பேசி முடித்துக்கொள்ளலாம் என்று நாங்கள் சொல்லி இருந்தோம், அவர்கள் அதற்கு வரவில்லை. அதன்பிறகு இருதரப்பினரும் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்" என்றார் .