சென்னையை அடுத்த அம்பத்தூர் அடுக்குமாடி குடியிருப்பில் திருடிவிட்டு தப்பி சென்ற திருடர்களை, காவல்துறையினர் சினிமா பாணியில் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே தமிழ்நாடு வீட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. இதில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த குடியிருப்பு வீட்டில் உள்ள நகைகளை திருடப்பட்டுள்ளதாக அம்பத்தூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த இருவரிடம் விசாரிக்க முயன்ற போது, காவல்துறையினர் தங்களை நோக்கி வருவதை கண்டு சுதாரித்த அந்த இருவரும் தங்களுடைய இருசக்கர வாகனத்தை எடுத்து தப்பிச் சென்றனர். அப்போது, காவல்துறையினர், சினிமா பாணியில் சுமார் 6 கி.மீ வரை துரத்திச் சென்று அவர்களை மடக்கிப் பிடித்தனர். அதன் பிறகு, அவர்களிடம் காவல்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அவர்களிடம் இருந்த வெள்ளி கொலுசு, தங்க மோதிரம், செயின், கட்டுக்கட்டாக பணம் உள்ளிட்ட பொருள்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அந்த இருவரையும் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர்கள் இருவரும் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மற்றும் கலையரசன் என்பது தெரியவந்தது. மேலும், அவர்கள்தான் அடுக்குமாடி குடியிருப்பில் திருடியுள்ளதாக காவல்துறையினருக்கு தெரியவந்ததை அடுத்து அவர்களை கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.