Skip to main content

'இவ்வளவு அக்கிரமமாக காவல்துறை நடந்து கொள்வது ஆட்சிக்கு நல்லதல்ல'-சிஐடியு மாநில தலைவர் எச்சரிக்கை   

Published on 09/10/2024 | Edited on 09/10/2024
'Police behaving so badly is not good for the government' - CITU State President warns

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள சுங்குவார்சத்திரம் அருகே சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த ஒன்பதாம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து பலமுறை சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அதில் உடன்பாடு எட்ட முடியாத சூழ்நிலை இருந்தது. இதனால் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

தொடர்ந்து நேற்று முப்பதாவது நாளாக போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் வீடுகளுக்கு சென்ற போலீசார் 10க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர். இதில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதேநேரம் போராட்ட பந்தல்கள் நள்ளிரவில் அகற்றப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தற்பொழுது போலீசாரின் தடுப்புகளை மீறி 200 க்கும் மேற்பட்ட சாம்சங் பணியாளர்கள் பேரணியாக நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மீண்டும்  போராட்டம் நடத்துவதற்காக அங்கு கூடியுள்ள ஊழியர்களை ஐந்து நிமிடத்தில் கலைந்து செல்ல போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் சிஐடியு தலைவர் சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், ''இது காவல்துறையின் மிக மோசமான அத்துமீறல். காவல்துறை இப்படியெல்லாம் செய்வதற்கு சட்டமே இல்லை. இந்த இடமே தனியார் இடம். இங்கே வந்து கைது செய்வதற்கு எந்த உரிமையும் கிடையாது. இவ்வளவு அக்கிரமமாக காவல்துறை நடந்து கொள்வது ஆட்சிக்கு நல்லதல்ல. முதல்வர் இதில் உடனடியாக தலையிட வேண்டும். காலனியாக இந்த நாடு இருக்கும்பொழுது காவல்துறை எப்படி எல்லாம் மக்களுக்கு எதிராக அடக்குமுறையை எப்படி ஏவி எப்படி கொடுமைப்படுத்தினார்களோ அதேபோன்ற காரியத்தில் இவர்கள் ஈடுபடுகிறார்கள். கார்ப்பரேட் நிறுவனத்திற்கு ஆதரவாக பெரும்பான்மை தொழிலாளிகளை சிறுபான்மை தொழிலாளிகளின் பக்கம் சாய்ப்பதற்காக அவர்களை மிரட்டுவதிலும் அவர்களை அச்சுறுத்துவதிலும் போலீசே ஈடுபடுகிறது.

'Police behaving so badly is not good for the government' - CITU State President warns

31 நாட்களாக வேலை நிறுத்தம் நடத்துவதன் மூலமாக தமிழ்நாடு முழுவதும், இந்தியா முழுவதும் எங்களுடைய எதிர்ப்பை காட்டி வருகிறோம். கார்ப்பரேட்க்கு ஆதரவாக இந்த அரசு செயல்படுவது தவறு. அமைச்சர் எங்களுடைய கோரிக்கை என்னவென்றே புரிந்து கொள்ளவில்லை. அவர் புரிந்து கொள்ளவில்லையா அல்லது புரிந்து கொள்ளாத மாதிரி நடிக்கிறாரா என்று தெரியவில்லை. ரிஜிஸ்ட்ரேஷன் என்பது எங்களுடைய உடனடி கோரிக்கை அல்ல. ரிஜிஸ்ட்ரேஷன் செய்தால் எங்களுடைய வேலை நிறுத்தத்தை வாபஸ் வாங்குவோம் என்று எப்போதும் எங்கேயும் சொல்லவில்லை. ரிஜிஸ்ட்ரேஷன் என்பது ஆட்டோமேட்டிக்காக எங்களுக்கு கிடைக்கும். இன்னைக்கு இல்லை என்றால் நாளைக்கு கிடைக்கும். நாளை இல்லை என்றால் அடுத்த மாதம் கிடைக்கும். அதற்கு அமைச்சருடைய தயவு எங்களுக்கு தேவையில்லை.

இவர்களாக செய்ய வேண்டியதை கடந்து போனதால்தான் நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்றோம். நீதிமன்றத்திற்கு போன பிறகு அமைச்சர் என்ன சொல்வது. நீதிமன்றம் சொல்வதுபடி நடந்து கொள்ளலாம் என்று சொல்வதற்கு இவர் என்ன. ஆகவே அமைச்சர் சொல்வது தவறு. அவர் செய்வது மழுப்பல். எங்கள் கோரிக்கையாக அல்ல எங்கள் கோரிக்கை சங்கத்தை ஏற்க வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் என்பதே. அதைக் கூட ஒத்துக்கொள்ள வைக்கவில்லை என்றால் எதற்காக அரசு எதற்காக, ஆட்சி. நேற்று இரவு முழுவதும் பத்து பேரை கைது செய்தார்கள். எல்லா குடும்பங்களையும் அச்சுறுத்தியுள்ளீர்கள். எல்லா குடும்பத்திலும் பீதி உண்டாக்கி இருக்கிறீர்கள். பெண்கள் முழுவதும் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் அரசு செய்ய வேண்டிய காரியமா? எந்த வகையிலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. இது போலீஸினுடைய அத்துமீறல்'' என்றார்.

சார்ந்த செய்திகள்