நாகர்கோவில் போக்குவரத்து விதிமுறையை மீறி சென்றதாக கூறி வாலிபரை அடித்து உதைத்து கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகர்கோவில் கலெக்டா் அலுவலகம் சந்திப்பில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. திருவனந்தபுரம் கன்னியாகுமரி சாலையை இணைக்கும் இந்த ரோடு வாகனங்கள் நெருக்கடியால் எந்த நேரமும் பரபரப்போடு காணப்படும். மேலும் இந்த சிக்னலுக்கு எதிரே தான் பிரபல துணிகடையும் நகை கடையும் உள்ளது. இதனால் அங்கு வரும் மக்கள் நெருக்கடியும் வாகன ஓட்டிகளை திக்கு முக்காட வைத்து விடும்.
இந்தநிலையில் இந்த சிக்னல் லைட் கடந்த ஓரு மாதமாக எரியவில்லை மேலும் அதை சரி செய்யவும் போலீசாரும் போக்குவரத்து போலீசாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் போக்குவரத்து போலீசார் ஒருவா் நின்று வாகனங்களை திருப்பி விட்டு கொண்டிருப்பார்.
நேற்று விடுமுறை நாள் என்பதால் அந்த பிரபல துணி கடைமுன் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று மதியம் போக்குவரத்து போலீஸ் ஓருவா் ரோட்டில் சென்ற வாகனங்களை கவனிக்காமல் அந்த துணிகடைக்கு வரக்கூடிய வாகனங்களுக்கு வழி விடுவதில் அந்த நிறுவனத்தின் ஊழியர் போல் செயல்பட்டு வந்தார்.
இந்தநேரத்தில் தான் குமரி காலணியை சோ்ந்த ஸ்ரீநாத் என்ற வாலிபா் மோட்டர் சைக்கிளில் செல்போன் பேசியபடி வேகமாக வந்து விதிமுறையை மீறி சிக்னலை கடக்க முயன்றவர் போலீசை கண்டதும் நிலைகுலைந்து பயந்து போலீசை இடிப்பது போல் அவர் முன்னால் கொண்டு நிறுத்தினா். இதனால் பயந்து போன போலீஸ் ஸ்ரீநாத்தை பிடித்து சத்தம் போட்டார். பதிலுக்கு ஸ்ரீநாத்தும் வாக்குவாதம் செய்து போலீசாரை மிரட்டியுள்ளர்.
அந்த நேரத்தில் அங்கு வந்த நேசமணிநகா் எஸ்.ஐ.மோகன் அய்யர் என்ன சம்பவம் என்று கூட விசாரிக்காமல் ஸ்ரீநாத்தை அடித்து உதைத்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் அங்கு வைத்தும் அவரை நன்றாக கவனித்து விட்டு வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கடந்த ஓரு மாத காலமாக சிக்னல் லைட் எரியாததால் இது போன்று பல சம்பவங்கள் நடந்துள்ளது. மேலும் இந்த சிக்னலை கடந்து தான் தினமும் கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்ட உயர்அதிகாரிகளும் செல்கின்றனா். ஆனால் அதை சரி செய்ய யாரும் முன்வரவில்லை. தனியார் ஒருவர் செய்து கொடுத்த இந்த சிக்னலை அவரே சரிசெய்யட்டும் என்று காவல்துறை பொது மக்களின் சிரமத்தை பற்றி கவலை படாமல் காத்திருக்கிறது.