Skip to main content

அதிமுக எம்எல்ஏ தலைமையில் திருமணம்; மாப்பிள்ளையைக் கைது செய்த போலீஸ்

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
 police arrested the youth who cheated the girl by pretending to be love

புதுச்சத்திரம் அருகே கீழ்பூவானிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ப்ரகதி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) (23). இவர் கடலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்  இளங்கலை கணிதம் பயின்றுள்ளார்.  இந்நிலையில் அதே கல்லூரியில் இளங்கலை விலங்கியல் பயின்ற குறிஞ்சிப்பாடி அருகே குண்டியமல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணாசங்கர் மகன் சஞ்சீவிராஜ்( 24)  இவர்கள் கல்லூரியில் படிக்கும் போதிலிருந்து இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சஞ்சீவிராஜ் ப்ரகதியை கடற்கரை, கோயில், சினிமா தியேட்டர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றியுள்ளார். பின்னர் கடந்த 2019 மார்ச் 25ஆம் தேதி கீழ்பூவானிகுப்பம் கிராமத்தில் உள்ள தென்னந்தோப்புக்கு இரவு 10 மணிக்கு வற்புறுத்தி அழைத்துச் சென்று திருமணம் செய்து கொள்வதாக கட்டாயப்படுத்தி ஆசைவார்த்தை கூறி தனிமையில் இருந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து இவரை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை தனிமையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் எப்போ திருமணம் செய்து கொள்வது என கேட்டபோது திருமணம் தற்போது செய்து கொள்ள முடியாது என்றும், இவர் இவரது மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அதற்கு நிச்சயம் செய்து விட்டதால் அவளைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என கூறியுள்ளார். பின்னர் இவரிடம் பேசுவதை நிறுத்திவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்துள்ளார்.

இதனைதொடர்ந்து வரும் 11-ந்தேதி அவரது மாமா மகளுடன் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் காலை திருமணம் செய்துகொண்டு மாலையில் குறிஞ்சிப்பாடியில் உள்ள திருமண மண்டபத்தில் வரவேற்பு நடைபெற உள்ளது. இதில் அதிமுக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் புவனகிரி சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித்தேவன் தலைமையில் நடைபெற உள்ளது. திருமண பத்திரிகையை உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும்  கொடுத்து வந்துள்ளனர். பத்திரிகை வைக்கும் தகவல் அறிந்து கடந்த 4-ந்தேதி ப்ரகதி மருந்து குடித்துவிட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதுகுறித்து விபரம் அறிந்த பெண் தரப்பினர் சம்பந்தப்பட்டவர்களிடம் திருமணம் செய்துகொள்ள பேசியுள்ளனர். ஆனால் அவர்கள் மறுத்துள்ளனர். இந்த நிலையில் சிதம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 8-ந்தேதி புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு சம்பவத்தின் உண்மை தன்மை அறிந்து சம்பந்தபட்ட சஞ்சீவிராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருமணத்திற்கு 2 நாட்களே உள்ள நிலையில் மாப்பிள்ளை கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்ற சம்பவம் இந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்