ஈரோடு மேட்டூர் சாலையில் யுனிக் எக்ஸ்போர்ட் என்ற தனியார் நிறுவன தலைமையிடம் செயல்பட்டு வந்தது. தமிழகம் முழுவதும் இதன் கிளை நிறுவனங்கள் தொடக்கப்பட்டு இயங்கி வருகிறது. இதன் நிர்வாக இயக்குநராக நவீன் குமார் என்பவர் இருந்தார்.
இந்நிலையில் இந்நிறுவனத்தில், 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.9 ஆயிரம் வீதம் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயும், ரூ.5 லட்சம் முதலீட்டுக்கு மாதம் ரூ.75 ஆயிரம் வீதம் 7 லட்சத்து 50 ஆயிரமும், ரூ.25 லட்சத்திற்கு 5 வருடத்தில் 4 தவணையாக ரூ. 83 லட்சமும் தருவதாக கவர்ச்சி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். குறிப்பாக முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு மட்டுமே இத்திட்டம் செயல்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டதை நம்பி, ஈரோடு, மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பனியில் உள்ள ராணுவ வீரர்கள் என 1,200 கோடி ரூபாய் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், முதலீடு செய்த முதல் இரண்டு மாதத்திற்கு, திட்ட அறிவிப்பின் படி பணத்தை திருப்பி கொடுத்த அந்நிறுவனம், அதன் பிறகு பணத்தை வழங்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதுகுறித்து பணத்தை முதலீடு செய்தவர்கள் கேட்டபோது, உரிய விளக்கம் அளிக்கவில்லை. பின்னர் திடீரென அந்த நிறுவனம் மூடப்பட்டிருந்தது. நிர்வாக இயக்குநர் செல் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு அவர் தலைமறைவானார். இதனால் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்த முன்னாள் ராணுவத்தினர், இந்நாள் ராணுவத்தினர் மற்றும் அவரது உறவினர்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் மனு கொடுத்தனர். இந்த மனு மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், மாவட்ட குற்றப்பிரிவு போலீசிற்கு உத்தரவிட்டார். அதன் பெயரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நிர்வாக இயக்குநர் நவீன்குமாரை தேடி வந்தனர். அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில் நவீன்குமார் வெளிநாட்டுக்கு தப்பி செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்திருப்பதாக, ஈரோடு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அப்போது சென்னை விமான நிலையத்திற்கு விரைந்து சென்ற குற்றப்பிரிவு போலீசார், நவீன் குமாரை கைது செய்தனர். பின்னர், அவர் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.