மதுரை மாவட்டத்தில் திருமங்கலம், உசிலம்பட்டி, சிலைமான், கருப்பாயூரணி ஆகிய பகுதிகளிலும் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதிகளிலும் கடந்த சில ஆண்டுகளாகவே திருட்டுச் சம்பவம் அதிகரித்துள்ளது. குறிப்பாக பகல் நேரங்களில் வெக்கை தாங்கமுடியாத மக்கள், கதவைத் திறந்துவைத்துவிட்டு வீட்டுக்குள் வேலை பார்க்கும் நேரத்தில் இந்த திருட்டுகள் அரங்கேறி வந்துள்ளது. மேலும், திருடுவதை வீட்டின் உரிமையாளர்கள் பார்த்துவிட்டால்.. அவர்களை மிரட்டி.. அவர்கள் அணிந்திருக்கும் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடிப்பதோடு, பீரோவில் இருக்கும் நகைகளையும் கொள்ளையடித்து செல்வதாக 20 க்கும் மேற்பட்ட புகார்கள், சிலைமான் மற்றும் கருப்பாயூரணி காவல் நிலையத்திற்கு வந்துள்ளது.
அதேபோல, பூட்டிய வீடுகளை உடைத்து உள்ளே இருக்கும் பணம், நகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை கொள்ளையடிக்கும் சம்பவங்களும் நடப்பதாக அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வந்தது. சுமார் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த திருட்டுச் சம்பவத்தை புலனாய்வு செய்துவந்த போலீசார், குற்றவாளிகளை நெருங்க முடியாமல் திணறி வந்தனர். இந்த நிலையில், இந்த கொள்ளை வழக்கில்.. கூடுதல் கவனம் செலுத்திய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவபிரசாத்... ஊமச்சிகுளம் காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணன் சிலைமான், காவல் ஆய்வாளர் மோகன் தலைமையில் தனிப்படை ஒன்றை அமைத்து உத்தரவிட்டார்.
இந்த தனிப்படை காவல்துறையினர், கொள்ளை நடந்த இடங்களில் தீவிர விசாரணை நடத்தினர். தடயம் ஏதேனும் கிடைக்கிறதா.. பாதிக்கப்பட்ட மக்கள் பேசுவதில் ஏதேனும் தகவல் கிடைக்கிறதா என பல கோணங்களில் இந்த வழக்கை விசாரித்து வந்துள்ளனர். அப்போது, போலீசார் நடத்திய பலகட்ட தீவிர விசாரணையில், பார்ப்பதற்கு அப்பாவிகள் போல, வயதான பெண் ஒருவரும் அவருடன் மூன்று இளைஞர்களும் சென்று இதுபோன்று பகல்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்தது.
இதனையடுத்து, அந்த 4 பேர் கொண்ட கும்பல் குறித்த விசாரணையை போலீசார் தீவிரமாக முடுக்கிவிட்டனர். மூன்று ஆண்கள் உட்பட ஒரு பெண்ணை உள்ளடக்கிய இந்த கும்பல், வியாழக்கிழமை அன்று, கல்மேடு பகுதி வழியாகச் சென்றதாகவும், கல்மேடு பகுதியில் மீண்டும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட உள்ளதாகவும் ரகசிய தகவல் ஒன்று, தனிப்படை காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து, கல்மேடு சந்திப்பு பகுதியில் தனிப்படை காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். அப்போது பைக்கில் இரண்டு கூலித் தொழிலாளி இளைஞர்கள் இருந்துள்ளனர். அவர்கள் எதையோ மறைத்து வைத்திருந்தனர், இதைக் கண்டுபிடித்த போலீசார் அது என்ன என கேட்டுள்ளனர். உடனே முகம் மாறிப்போன இளைஞர்கள், “அது ஒன்னும் இல்லை சார்.. நாங்க வேலைக்காக வைத்திருக்கும் ஆயுதங்கள்” என சமாளித்துள்ளனர்.
இதை நம்பாத போலீசார், அந்த பைகளை திறந்து பார்த்துள்ளனர். அப்போது, பைக்கில் கொள்ளை அடிப்பதற்கு தேவையான அத்தனை ஆயுதங்கள் மற்றும் கையுறை ஆகியவற்றை மறைத்திருப்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, அவர்களிடம் காவல்துறையினர் அவர்களது ஸ்டைலில் விசராணை நடத்தினர். இந்த விசாரணையில், அவர்கள் இருவரும் மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் இளமனூர்புதூரைச் சேர்ந்த சின்னசாமி என்ற நரி மற்றும் சோனைச்சாமி என தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கூடுதல் தகவல்கள் ஏதேனும் கிடைக்கிறதா என போலீசார் நடத்திய விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
இந்த இருவரும் இவர்களுடைய அண்ணன் பெரிய கருப்பசாமி மற்றும் அவருடைய தாயார் ஆசைப்பொண்ணு ஆகியோரும் ஒரே குடும்பாக சேர்ந்து, திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக சிலைமான் கருப்பாயூரணி, திருமங்கலம் ஆகிய பகுதிகளில் கோடை காலங்களில் காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கக்கூடிய நபர்களின் வீடுகளை கண்டறிந்து, அவர்கள் வீட்டுக்குள் சென்று, நகைகளை திருடிவந்ததும், திருடிவிட்டு அந்த பகுதியில் ஏதோ கூலி வேலைக்கு வந்தது போல, அப்பாவிகளாக நடித்தும் தெரியவந்துள்ளது. மேலும், இவர்கள் மீது முன் வழக்குகள் எதுவும் இல்லாததால்.. இவர்களை கண்டுபிடிப்பதற்கு போலீசார் திணறியுள்ளனர்.
இதனையடுத்து நான்கு பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களின் வீடுகளில் சென்று விசாரணை நடத்திய போது, மேலும் பல ரகசியங்கள் வெளியானது. கொள்ளையடித்த நகைகளை இந்த குடும்பத்தார்.. வீடுகளைச் சுற்றி புதைத்துவைத்து.. அதன்மேலே சிமெண்ட் பூசி மறைத்து வைத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து வீட்டை சுற்றி வைத்திருந்த 180 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து ஒன்பது லட்சம் ரூபாய் ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர். கொள்ளை கும்பலை கைது செய்த தனிப்படை காவல்துறையினருக்கு மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் பாராட்டு தெரிவித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, “கடந்த மூன்று ஆண்டுகளாக திறந்த வீடுகளை மட்டும் குறிவைத்து கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள் நான்கு பேரை கைது செய்துள்ளோம். இதனால் முப்பதுக்கும் மேற்பட்ட பழைய வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளது. அவர்களிடம் உள்ள வீடு மற்றும் வாகனங்களை சட்டப்படி பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் என தெரிவித்தார். மேலும் இவர்களுடன் வேறு ஏதும் கொள்ளை வழக்குகளில் தொடர்பில் உள்ளவர்கள் தொடர்பில் இருக்கிறார்களா என்பது குறித்தான விசாரணையும் நடத்தப்பட்டு வருவதாகவும், இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின்பாக காவல்துறை விசாரணைக்கு எடுத்து முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
வீட்டைச் சுற்றி திருடிய நகைகளை புதைத்துவைத்து சிமென்ட் பூசி மறைத்து வைத்திருந்த கொள்ளைக் குடும்பத்தின் செயல் மதுரை மக்களை அதிரவைத்துள்ளது. இதையடுத்து, அவர்களை போலீசார் கைதுசெய்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களை நிம்மதி பெருமூச்சு விடவைத்துள்ளது.