சென்னையின் பல்வேறு பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்த கும்பலை மதுரவாயல் போலீசார் கைது செய்து வருகின்றனர். சென்னை கோயம்பேடு காவல் மாவட்ட துணை ஆணையர் உத்தரவுப்படி மதுரவாயல் போலீசார் கடந்த ஒரு வாரமாக போதை மாத்திரைகள் விற்கும் கும்பலுக்கு எதிராகக் களத்தில் இறங்கியுள்ளனர்.
அந்த வகையில் காவல் உதவி ஆய்வாளர் மகாராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் இரண்டு நாட்களுக்கு முன்னர் 11 பேர் கொண்ட போதை மாத்திரை விற்கும் கும்பலை சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்நிலையில் இரண்டு பேர் மும்பையில் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வருவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் ரயில் நிலையம் வந்த போலீசார் போதை மாத்திரைகளுடன் இருந்த இரண்டு இளைஞர்களை ஓடும் ரயிலில் வைத்து கைது செய்தனர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் கெருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ்(19) மற்றும் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த மனோகர்(21) என்பது தெரியவந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்யும் கெருகம்பாக்கத்தை சேர்ந்த சந்தோஷ்(20), ஸ்டாலின்(20), அருண்குமார்(22), விஷ்ணு(22), குன்றத்துரை சேர்ந்த விமல் ராஜ்(21), கொளப்பாக்கத்தை சேர்ந்த சந்தோஷ்(23) மற்றும் சின்ன போரூர் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்(22) ஆகியோரை கைது செய்தனர்.
மனோகர் மற்றும் பிரகாஷ் ஆகியோரிடம் இருந்து 200 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்ட நிலையில், மற்ற ஏழு நபர்களிடமிருந்தும் 400 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் கைது செய்யப்பட்ட 9 பேரையும் ராமாபுரம் காவல் நிலையத்தில் மதுரவாயில் போலீசார் ஒப்படைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விரைவில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.