அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் - அரியலூர் சாலையில் உள்ளது தத்தனூர் குடிக்காடு. இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(23). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது பெண்ணைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது அந்தச் சிறுமி தத்தனூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவப் பரிசோதனைக்காக சென்றுள்ளார். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரிடம் நடத்திய விசாரணையில் வயது குறைவாக உள்ள அந்தச் சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் நடத்தி வைத்து, அதன்மூலம் அந்தச் சிறுமி கர்ப்பிணியாக உள்ளதை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து அரியலூர் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரி கார்த்திகேயனுக்கு தத்தனூர் சுகாதார நிலைய டாக்டர்கள் தகவல் கொடுத்தனர். அதன்படி பாதுகாப்பு நல அலுவலர் கார்த்திகேயன் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் விசாரணை நடத்தி அனைத்து மகளிர் போலீசார் ராஜ்குமார், பெண்ணின் பெற்றோர், திருமணத்திற்கு உறுதுணையாக இருந்த உறவினர்கள் உட்பட நான்கு பேரை கைது செய்தனர். அதே கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் என்ற 24 வயது வாலிபர், 17 வயது சிறுமியைத் திருமணம் செய்து இருப்பதாக ஜெயங்கொண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் வந்துள்ளது.
அந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய மகளிர் காவல் நிலைய போலீசார் ரஞ்சித்குமாரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். பெண்ணின் பெற்றோர் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ளனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த இரண்டு வாலிபர்கள் சிறுமிகளைத் திருமணம் செய்து தற்போது போக்சோ சட்டத்தின்படி கைது செய்யப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.