சர்கார் படத்திற்கு எதிராக அதிமுகவினர் தொடர் போராட்டங்களை நடத்தியும், பேனர்கள் போன்றவற்றை கிழித்தும், முற்றுகையிட்டும் வந்தனர். தற்போது அந்தப் படத்தின் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் வீட்டிற்கு காவல்துறையினர் வந்துள்ளனர். இது கைதா இல்லை பாதுகாப்பிற்கா எனத் தெரியாத நிலையில், அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்-இன் ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர். முருகதாஸை கைது செய்வதற்காக காவல்துறை அவரது வீட்டிற்கு சென்றுள்ளது என ட்வீட் பதிவிடப்பட்டிருந்தது. அடுத்த ட்வீட்டில் அவர் வீட்டில் இல்லாததால், அவரைப் பற்றி விசாரித்துவிட்டு காவல்துறையினர் புறப்பட்டனர் என பதிவிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து காவல்துறை தெரிவித்திருப்பதாவது, வழக்கமான ரோந்து பணியில்தான் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். கைது செய்யப் போகிறோம் என சன் பிக்சர்ஸ்-இன் ட்விட்டர் பக்கத்தில் வந்திருக்கும் செய்தி தவறு, நாங்கள் அதற்காக வரவில்லை என மறுத்துள்ளனர்.