கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் குணசேகர் மற்றும் காவலர்கள் கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வண்டகப்பாடி ஓடை அருகே சாராய வேட்டையில் ஈடுபட்டிருந்த போது கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊறல் 200 லிட்டர் அளவு பிடிக்கக்கூடிய 04 பேரல்களில் சுமார் 800 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 3 பிளாஸ்டிக் குடங்களில் இருந்த 10 லிட்டர் சாராயம் ஆகியவற்றை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திலேயே காவல் துறையினரால் கொட்டி அழிக்கப்பட்டது. கள்ளசராயத்தால் ஏற்கனவே 68 பேர் உயிரிழந்த நிலையில் கல்வராயன் மலைப்பகுதியில் பல்வேறு தனிப்படையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில் திடீரென சாராய ஊரல் மற்றும் கள்ளச்சாராயம் அழிக்கப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் ஏழுமலை தலைமையில் 7 உதவி ஆய்வாளர் கொண்ட குழு தும்பராம்பட்டு மற்றும் வெள்ளரிகாடு ஆகிய கிராமங்களில் சோதனையில் ஈடுபட்ட போது லாரி ட்யூப் மற்றும் பிளாஸ்டிக் பாக்கெட்டில் வைத்திருந்த 60 லிட்டர் கள்ளச்சாராயம் மற்றும் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்திய 100 லிட்டர் சாராய ஊறல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கள்ளச்சாராயம் விற்பனைக்காக வைத்திருந்தும், கள்ளச்சாராயத்திற்காக ஊறல் வைத்திருந்த தும்பராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சின்னையன் மற்றும் வெள்ளரிக்காடு கிராமத்தைச் சேர்ந்த சாமிதுரை ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
காவல்துறையினர் பல்வேறு தனிப்படை அமைத்துத் தேடி வருகிறோம் எனத் தினந்தோறும் விளம்பரத்திற்காகச் செய்திகளை வெளியிட்டு வருகிறார்களா இல்லை பொதுமக்கள் நலன் கருதி தனிப்படை அமைத்துத் தேடி வருகிறார்கள் எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேள்வி எழுப்பும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கள்ளச்சாராயம் காய்ச்சும் குற்றவாளியை காவல்துறையினர் பிடிக்காமல் தப்பி ஓடிவிட்டார் எனத் தெரிவித்து வருவதும் வாடிக்கையாக உள்ளது என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் குற்றச்சாட்டு தெரிவித்து வருகின்றனர். கள்ளச்சாராயத்தால் எத்தனை உயிர்கள் காவு வாங்கினாலும் கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் விற்பனை செய்வதும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் உள்ளது. பொதுமக்களின் உயிர்களின் மேல் அக்கறை கொள்ளாத இந்த அரசு நடவடிக்கையைத் தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.