மதுரை தொகுதியின் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுத்த ஒரு வழக்கில் நீதிபதிகள் இன்று (19/08/2021) உத்தரவு பிறப்பித்தனர். அதில், "மாநில அரசு எந்த மொழியில் மத்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்புகிறதோ, அதே மொழியிலேயே மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். இந்திய அலுவலக மொழி சட்டமும் இதனை உறுதி செய்கிறது. மத்திய அரசு மற்றும் அதன் அலுவலகர்கள் இந்திய அலுவல் மொழிச் சட்டத்தை முறையாகப் பின்பற்ற வேண்டும்" என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதியின் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் தமிழக எம்.பி.களுக்கு ஹிந்தியில் கடிதம் அனுப்பி வந்தன. இது சட்டவிரோதம். எங்களில் பலருக்கு ஹிந்தி தெரியாது. பலமுறை சுட்டிக்காட்டியும் பயனில்லை. ஆகவே இது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய அரசுக்கு ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால், ஆங்கிலத்தில்தான் பதில் அனுப்ப வேண்டும். இந்தியில் அனுப்புவது அலுவல் மொழிச் சட்டத்திற்கு எதிரானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தோழர் சு.வெங்கடேசனுக்கு நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.