தர்மபுரியில், அரசுப்பள்ளி மாணவிகளிடம் அத்துமீறி நடந்துகொண்ட ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
தர்மபுரி குமாரசாமிபேட்டையைச் சேர்ந்தவர் முருகன். கூலித்தொழிலாளி. இவருடைய மகள் டயானா (வயது 12, தந்தை, மகள் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). அதே பகுதியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள 8ம் வகுப்பு படித்து வருகிறாள். இந்தப் பள்ளியில் பன்னீர்செல்வம் (59) என்பவர் ஆங்கில பாட ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர், டயானாவிடம் கையெழுத்து சரியில்லை என்று கூறி, தவறான நோக்கத்தோடு தொட்டு பேசி இருக்கிறார்.
அந்தப் பள்ளியில் பல மாணவிகளிடம் இயல்பாக பேசுவது போல கன்னங்களை பிடித்துக் கிள்ளுவது உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து மாணவி ஒருவர், தர்மபுரி மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் விசாரணையில், மாணவி அளித்த புகாரில் சொல்லப்பட்டவை அனைத்தும் உண்மை எனத் தெரியவந்தது.
இதையடுத்து ஆசிரியர் பன்னீர்செல்வம் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கைது நடவடிக்கைக்கு பயந்து அவர் திடீரென்று தலைமறைவாகி விட்டார். அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.