ஆன்மிக அரசியல் எனத் தன் நிலைப் பாட்டை இரண்டாண்டுகளுக்கு முன் வெளிப்படுத்திய ரஜினி போர் வரும் போது களத்தில் இறங்குவோம் என்று ரசிகர்களிடம் தெரிவித்தார். ரஜினி எதிர்பார்க்கும் போர் எப்போது வரும்? எப்போது அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது மன்றத்தினர் நெடுங்காலமாக காத்திருக்கின்றனர். ஒரு புறம் சினிமா களத்தில் பல வருடங்களாக நேருக்கு நேர் மோதிக்கொண்டிருந்த கமல் கட்சி ஆரம்பித்து தேர்தல் களமும் கண்டுவிட்டார். அரசியல் களத்தில் ரஜினியை கமல் முந்திச் செல்கிறார் என்ற பேச்சு உலாவ, கமல் பிறந்தநாள் நிகழ்ச்சியில் காலம் வந்தால் அரசியலில் நானும் கமலும் இணைந்து செயல்படுவோம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் ரஜினி.

இதற்கிடையில் என்னுடைய தனித்த செயல்பாடும், அதில் கிடைக்கும் வெற்றியும் உங்களுக்கானதுதான் என ஏற்கனவே அமித்ஷாவிடம் ரஜினி உறுதி தந்திருப்பதாகவும், ஆனால் பா.ஜ.க.வின் நேரடி அரசியலுக்குள் சிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில் ரஜினி கட்சி ஆரம்பித்த உடன் ரஜினி தலைமையிலான கூட்டணியில் பாமக இணையும் என்று காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், "நடிகர் ரஜினியுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ரஜினி முதலில் கட்சி துவங்கட்டும். துவங்கிய பின் கூட்டணி பற்றி யோசிக்கலாம்" என்று தெரிவித்துள்ளார். இந்த பேட்டி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.