ஒலிம்பிக்ஸ் போட்டிகளைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கடந்த 24-ஆம் தேதி தொடங்கி டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய வீரர்கள் அபாரமாக செயல்பட்டு பதக்கங்களைக் குவித்து வருகிறார்கள். இந்தநிலையில் இன்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். இதன்மூலம் தொடர்ந்து இரண்டு முறை பாரா ஒலிம்பிக்சில் பதக்கம் வென்று மாரியப்பன் சாதனை படைத்துள்ளார்.
கடந்த பாரா ஒலிம்பிக்சில் மாரியப்பன் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோட்டியில் இந்திய வீரர் சரத் குமார் வெண்கலம் வென்று அசத்தியுள்ளார். வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு பல்வேறு தரப்புகளில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. சேலம் மாவட்டம் வடகம்பட்டியைச் சேர்ந்த மாரியப்பன் இரண்டாவது முறையாக பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு பிரதமர் மோடி டிவிட்டரில் 'மாரியப்பன் சாதனையால் தேசம் பெருமை கொள்கிறது' என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் வாழ்த்து செய்தியில்,
''டோக்கியோ பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டும் போட்டிகளில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர் தங்கவேலு மாரியப்பனுக்கும், வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் சரத்குமாருக்கும் வாழ்த்துகள். அவர்களின் வெற்றி உலக அரங்கில் இந்தியாவைத் தலைநிமிர வைத்திருக்கிறது... பாராட்டுகள்!
மாரியப்பன் 2016-ஆம் ஆண்டு போட்டியில் தங்கம் வென்றிருந்தார்... இந்தப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதன் மூலம் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் அடுத்தடுத்து பதக்கங்களை வென்ற இந்திய வீரர் என்ற பெருமையை மாரியப்பன் பெற்றுள்ளார். இது அவரது விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றி!
தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் மாரியப்பன் கடைசி வரை இருந்தார். தட்பவெப்ப நிலை ஏற்படுத்திய தடையால் தான் தங்கம் கைநழுவிப் போனது. ஆனாலும் கூட கடந்த பாராலிம்பிக்சில் மாரியப்பன் படைத்த சாதனை இந்தப் போட்டியில் முறியடிக்கப்படவில்லை என்பது கூடுதல் பெருமையாகும்!' என தெரிவித்துள்ளார்.