Skip to main content

“2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையில்  கூட்டணி ஆட்சி” - அன்புமணி ராமதாஸ்

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

PMK-led coalition government in 2026 assembly elections” - Anbumani Ramadoss

 

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் பாமக மாநில பொதுக்குழு உறுப்பினர் குட்டிமணி விஜயலட்சுமி இல்ல திருமண விழாவிற்கு பாமக தலைவர் அன்புமணி வருகை தந்தார். திருமண விழாவில் கலந்துகொண்ட அன்புமணி ராமதாஸ், மணமக்கள் ராஜேந்திரன் - பிரியங்கா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து பின்னர் தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்பொழுது அவர் கூறியதாவது:- பாலாற்றை பாதுகாக்க தொடர்ந்து போராடி வருகிறது பாட்டாளி மக்கள் கட்சி. ஆன்லைன் சூதாட்டம் இளைஞர்கள் தற்கொலைக்கு காரணம் ஆளுநர் தான். திருச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தில் 48 வதாக ஒரு இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 19-வது நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கு காரணம் ஆளுநர். 

 

தமிழகத்தில் போதைப் பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக காவல்துறைக்கு தெரியாமல் விற்பதற்கு வாய்ப்பு இல்லை. அதை தடுத்து நிறுத்த வேண்டும். கொரோனாவிற்கு  பிறகு தான் மது விற்பனை அதிகரித்து உள்ளது. அடுத்த கட்ட இளைஞர்களைப் பார்க்க முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. போதைப் பொருட்களை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

 

தமிழகத்தில் போதைப் பொருட்களை தடுக்க 17 ஆயிரம் காவலர்கள் ஒரு டி.ஜி.பி. என உருவாக்கப்பட்டு இதனை தடுக்க வேண்டும். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள் அதிக அளவில் போதைப் பொருட்களை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதனை உடனடியாக தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். 

 

இந்தியாவிலேயே மது விற்பனைக்கு டார்கெட் வைத்து விற்பனை செய்யக்கூடிய மாநிலம் தமிழகம். இந்தியாவிலேயே அதிக மது விற்பனையாகும் மாநிலம் தமிழ்நாடு, இந்தியாவிலேயே அதிகம் சாலை விபத்து ஏற்படும் மாநிலம் தமிழ்நாடு, இந்தியாவிலேயே அதிகம் விதவைகள் இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு,  மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு, இந்தியாவிலேயே அதிகம் தற்கொலை நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு, இவை அனைத்துக்கும் காரணம் மது. தற்பொழுது மதுக்கடைகள், மது பார்கள் அதிகரித்து வருகிறது. இவை அனைத்துமே அமைச்சருடைய கூட்டணி தான். மதுவால் 30 சதவீதம் தமிழகத்திற்கு வருவாய் வருகிறது இதைத் தவிர்க்க வேண்டும்.


இது திமுகவின் நிறுவனர் அண்ணாவின் கொள்கைக்கு எதிரானது. திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு எனது வேண்டுகோள் இதை தவிர்க்க வேண்டும். தந்தை பெரியாரின் கொள்கை மது ஒழிப்பு, அண்ணாவின் கொள்கை, தந்தை பெரியாரின் கொள்கை இவற்றை பயன்படுத்துகின்ற திமுக அவர்களுடைய கொள்கையை ஏற்க மறுக்கின்றார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுக்கடையை படிப்படியாக குறைப்போம் மதுவை ஒழிப்போம் என  மேடை மேடைக்கு சொல்லிக் கொண்டிருந்த திமுக, தற்பொழுது ஒரு கடையைக் கூட மூடவில்லை. தமிழ்நாடு முதலமைச்சர் இளைஞர்களை மதுவில் இருந்து காப்பாற்ற வேண்டும்.


வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக தலைமையில்  கூட்டணி ஆட்சி அமைக்கப்படும். அதற்கு ஏற்ப 2024 நாடாளுமன்ற தேர்தலில் வியூகங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்