Skip to main content

“எம்.ஜி.ஆரை சுட்ட வழக்கில் எம்.ஆர். ராதாவுக்காக வாதடியவர்..” - மூத்த வழக்கறிஞர் நடராஜனுக்கு ராமதாஸ் இரங்கல்

Published on 11/11/2021 | Edited on 11/11/2021

 

PMK Leader Ramadoss condolence to advocate Natarajan

 

மூத்த வழக்கறிஞரான என். நடராஜன் இன்று (11.11.2021) காலை உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடல் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்குப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். 

 

இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் என். நடராஜனின் மறைவுக்குப் பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் என். நடராஜன், உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தி அறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

 

தமிழ்நாட்டின் மிகச்சிறந்த சட்ட வல்லுநர்களில் மறைந்த என். நடராஜன் குறிப்பிடத்தக்கவர். சட்டம் மற்றும் நீதித்துறை வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற பல வழக்குகளில் அவர் வாதாடியிருக்கிறார். அதிமுகவின் நிறுவனர் எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கில் எம்.ஆர். ராதாவுக்காக வாதாடியவர். நெருக்கடி நிலை காலத்தில் தமிழக அரசின் வழக்கறிஞராக இவர் பணியாற்றியுள்ளார்.

 

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்தவர். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 26 பேருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில் வாதிட்ட என். நடராஜன் 22 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வைத்தவர். ஏராளமான இளம் வழக்கறிஞர்களுக்கு வழிகாட்டியாக இருந்து அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தவர்.

 

தமிழ்நாட்டின் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக பணியாற்றிய சட்டநாதனின் மருமகன் ஆவார். பா.ம.க.வின் கொள்கைகள் மீது பற்று கொண்டவர். என் மீது அன்பு கொண்டவர். பல்வேறு விவகாரங்களில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு சட்ட ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அவரது மறைவு சட்டம் மற்றும் நீதித்துறைக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். மூத்த வழக்கறிஞர் என். நடராஜனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்