ஒருகாலத்தில் மேடைகளில் மட்டுமே அதிகமாக பேசப்பட்டது அரசியல். தற்போது, எல்லாம் டிஜிட்டலுக்கு மாறிவிட்ட நிலையில், ‘ட்விட்டர் பாலிடிக்ஸ்’ என்பது, அரசியல் கட்சிகளால், தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தமிழ்நாட்டில் 2017-18 ஆம் ஆண்டுகளில் குற்றச்செயல்கள் 18.61% அதிகரிப்பு! சென்னையும் கோவையும் கொலைநகரங்கள் என தேசிய குற்ற ஆவண அறிக்கையில் தகவல்! காவல்துறையை அரசியல் மயமாக்கி, அதன் கைகளைக் கட்டி ரவுடி ராஜ்ஜியத்திற்கு ‘பெர்மிட்’ வழங்கியிருக்கும் அராஜக ஆட்சி!’ எனப் பதிவிட்டார்.
மேலும் அவர், ‘தமிழகத்தில் ரவுடி ராஜ்ஜியம்!’ என்று வெளியிட்ட அறிக்கையில், ‘கூவத்தூர் கொண்டாட்டம் மூலம் முதலமைச்சராக பொறுப்பேற்ற திரு.பழனிசாமியின் ஆட்சி, சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தோல்வியடைந்து பரிதாபமாக நிற்கிறது’ என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மு.க.ஸ்டாலினின் கடுமையான விமர்சனத்துக்கு அதிமுக தரப்பு பதிலடி தரவேண்டும் அல்லவா! இருக்கவே இருக்கிறார், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி! வழக்கம்போல், தனது ட்வீட்டில், ‘மாண்பை பற்றி அறியாத- விஷயமறியா வாரிசு’ எனக் குறிப்பிட்டு, ‘2006-11 வரை திமுகவின் இருண்ட ஆட்சியில் பதியப்பட்ட சராசரி வழக்குகள் ஆண்டொன்றுக்கு 6,90,971. அதன்பின்னர், இன்றுவரை தொடரும், அதிமுக அரசில், சராசரி வழக்குகள் ஆண்டொன்றுக்கு 5,40,127. விவரமில்லையென்றால், வாயை மூடி மௌனம் காக்கவும்’ என்று ஒரு பிடிபிடித்துள்ளார்.
குற்றச்செயல்கள், வழக்குகள் எனப் பட்டியலிட்டு, மு.க.ஸ்டாலினும் கே.டி.ராஜேந்திரபாலாஜியும், அவரவருக்கு தெரிந்த புள்ளிவிபரம் தந்திருக்கின்றனர். தமிழக மக்களுக்கு தெரியாதது எதுவுமில்லை!