கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஈரோடு வந்த பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் பேசும்போது, "தமிழக அ.தி.மு.க. அரசு தமிழகத்தில் பாசன, நீர் மேலாண்மை திட்டத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அதே போல் அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றுவதாக தற்போது முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அது விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும். அது விவசாயிகள் பயன்பெறும் வகையில், திட்டம் வகுக்கப்படுகிறது.
இப்பகுதியிலும், டெல்டாவிலும் காவிரியிலும் தடுப்பணை கட்ட கோரினோம். அதனையும் விரைவில் அரசு நிறைவேற்ற வேண்டும். அதே போல் தமிழகம் கடைமடை மாநிலம். கர்நாடகாவால் காவிரியில் தடை, கேரளாவால் முல்லை பெரியாறு அணையில் நீர் வழங்க மறுப்பு, பாலாற்றில் ஆந்திராவில் தமிழகத்தின் நீர் உரிமை மறுப்பால், தமிழக விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். இதை போக்க, கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முயல வேண்டும். நாங்கள் மத்திய அரசை, தமிழக மக்கள் மூலம் அணுக முயல்கிறோம். இதன் மூலம், தமிழக குடிநீர், பாசன பிரச்னைகள் தீரும். தமிழகத்துக்கு தேவையான நீராதாரத்தை பெற, மத்திய அரசை வலியுறுத்துவோம்.
கேரளாவில் பம்பா – அச்சங்கோவில் ஆறு, மேற்கு நோக்கி ஓடி, அரபி கடலில் கலக்கிறது. இதை தென் மாவட்டங்களுக்கு திருப்பினால், குடிநீர், பாசனம் சிறக்கும். இதன் மூலம், கேரளாவுக்கும், உணவு பொருளை அனுப்பும் வாய்ப்பு ஏற்படும். சிறுவாணி அருகே கேரளா அரசு தடுப்பணை கட்டுவதால், தமிழகம் பாதிக்காதவாறு, கேரளா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஈரோடு, கோவை, கரூர், திருப்பூர், சேலம், நாமக்கல் மாவட்டங்கள், ஜவுளி, பின்னலாடை, நெசவு, மின்மோட்டார் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
இம்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்கு மத்திய, மாநில அரசுகள் தேவையான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக, வேளாண் உற்பத்திக்கான தொழிற்சாலை அமைத்தால், வேளாண் துறையும் சிறக்கும். இடஒதுக்கீட்டின் அளவை, ஜாதி வாரி கணக்கெடுப்புதான் நிர்ணயிக்கும். தமிழகத்தில், 69 சதவீத இடஒதுக்கீட்டை காக்க ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். விரைவில் நடக்க உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்புடன், இதனையும் சேர்ந்து நடத்த வேண்டும்.
நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை எந்த அடிப்படையில் நடந்தது என தெரியாது. இது, தேசிய அளவில் பல இடங்களில் நடத்தப்படுகிறது. அதுபோலத்தான் இதுவும் ஒன்று. முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்ய, தொடர்ந்து வலியுறுத்துகிறோம். மாநில அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என, நீதிமன்றம் கூறுகிறது. தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மத்திய அரசு கனிவாகவே நடந்து கொள்கிறது. எனவே, தமிழக கவர்னர்தான் முடிவை விரைவில் எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.