
அழிவின் விளிம்பிலிருந்து அன்னைத் தமிழைக் காப்பதற்காக பிப்ரவரி 21 உலக தாய்மொழி நாள் முதல் பா.ம.க மற்றும் பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிறுவனருமான மருத்துவர் ராமதாஸ் "தமிழைத் தேடி" விழிப்புணர்வு பரப்புரை பயணம் சென்னையில் தொடங்கி, மதுரை நோக்கி பயணப்படுகிறார். 3 ஆம் நாள் விழிப்புணர்வு பரப்புரை நிகழ்ச்சி புதுச்சேரி கம்பன் கலையரங்கில் நேற்று காலையிலும், கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் மாலையிலும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிகளுக்கு பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் கோ.க.மணி எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். தமிழ் படைப்பாளிகள் பேரியக்க பொதுச்செயலாளர் பாவலர் ஜெயபாஸ்கரன், புதுவை தமிழ்ச்சங்க தலைவர் முத்து, புதுச்சேரி மாநில பா.ம.க அமைப்பாளர் கணபதி, கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமிழ்த்தாய் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்புரையாற்றினார். அதில், “தமிழ் எங்கே இருக்கிறது என்று சொன்னால் ஐந்து கோடி ரூபாய் பரிசு தருகிறேன் என்று சொன்னேன். தமிழ் இருந்தால்தானே காட்டுவதற்கு? தமிழ் வேகமாக அழிந்து வருகிறது. சிங்கப்பூரில் தமிழைத் தாய் மொழியாக கொண்டவர்கள் கட்டாயமாக தமிழ் படிக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் கட்டாய தமிழ் பாடமாக்கி 17 ஆண்டுகள் ஆகியும் நடைமுறைக்கு வரவில்லை. மொழிகளில் மூத்த மொழியான தமிழ் மொழியை இழந்து கொண்டிருக்கிறோம். அழிந்து வரும் தமிழை அழியாமல் காக்கவே இந்த பயணம் செல்கிறேன்.
தனித்தமிழை தோற்றுவிக்க சவாலான காரியமாக எடுத்துக்கொண்டு தமிழ் அமைப்புகள் பணிசெய்ய வேண்டும். ஆங்காங்கே உள்ள தமிழ் அமைப்புகள் ஒன்று சேர்ந்து வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து அறிவிப்பு பலகைகளிலும் தமிழ் முதல் மொழியாக இருக்க வேண்டும், தமிழில் பெயர்கள் பலகைகளை எழுத கோரிக்கை வைக்க வேண்டும் அவர்கள் அவ்வாறு செய்யாமல், தமிழுக்கு முன்னுரிமை கொடுக்காமல் பிறமொழியை முதன்மைப்படுத்தினால் கருப்பு மையை கையில் எடுக்க வேண்டும். தமிழ் அல்லாத பிறமொழி எழுத்துக்களை கருப்பு மையினால் அழிக்க வேண்டும். நானும் உங்களுடன் வருகின்றேன். போராட்டம் தானே வாழ்க்கை தமிழுக்காக போராடுவதில் தவறில்லை. அழிந்து வரும் தமிழை தேடி போகின்றேன். எந்த மொழிக்கும் நான் எதிரானவன் இல்லை. வீடுகளிலும் வீதிகளிலும் பிறமொழி கலப்பு இல்லாமல் தமிழில் பேசி பழக வேண்டும், தொலைபேசியிலோ அல்லது நேரில் பார்க்கும் போதோ ஹலோ என்பது சொல்வதை விட்டுவிட்டு வணக்கம் என்று சொல்ல வேண்டும்” என்றார்.
இந்த விழிப்புணர்வு பயண நிகழ்ச்சிகளில் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாகிகள் பு.தா.அருள்மொழி, முனைவர் சா.சிவப்பிரகாசம், மருத்துவர் இரா.கோவிந்தசாமி, கடலூர் தமிழ் அமைப்புகள் கூட்டமைப்பு தலைவர் பேராசிரியர் இராச.குழந்தைவேலனார், புதுவை ஆய்வறிஞர் அருளி, பாரதிதாசன் அறக்கட்டளை தலைவர் கோ.பாரதி, புதுச்சேரி இலக்கிய பொழில் மன்றம் பூங்கொடி பராங்குசம், எழுத்தாளர் கண்மணி குணசேகரன், தாய்த்தமிழ் கல்வி இயக்க தலைவர் முனைவர் மகாலட்சுமி, பழ தாமரைக்கண்ணன் கோ ஜெகன் தர்மலிங்கம் பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாகிகள் பழ.தாமரைக்கண்ணன், கோ.ஜெகன், தர்மலிங்கம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் உணர்வாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.