Skip to main content

பெண் குழந்தை பிறப்பு குறைவில் தேசிய அளவில் 8வது இடத்தில் திருவண்ணாமலை!!

Published on 18/01/2019 | Edited on 18/01/2019

இந்தியாவில் கடந்த 2015-2016 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் மிகக் குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்ட மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டம் எட்டாவது இடத்தில் உள்ளது.

 

 

இந்தியாவில் குறைந்து வரும் ஆண்-பெண் இடையிலான பாலின விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்தில், பெண் குழந்தைள் காப்பாற்றுவோம், பெண் குழந்தைள் கற்பிப்போம் என்ற திட்டம் 2015-ம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் பெண் குழந்தைகளை பாதுகாத்து, குழந்தை பாலின விகிதத்தை அதிகரிப்பதற்கான ஒரு முன்னோடி திட்டமாகும்.

 

Thiruvannamalai is ranked 8th nationally in terms of female child birth

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2012-2013 ஆம் ஆண்டு குழந்தை பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு 930 பெண் குழந்தைகள் என இருந்தது. தற்போது 2017-2018 ஆம் ஆண்டு 1000 ஆண் குழந்தைகளுக்கு 884 பெண் குழந்தைகளாக குறைந்துள்ளது. இதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் குழந்தைகள் காப்பாற்றுவோம், பெண் குழந்தைகள் கற்பிப்போம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட அளவிலான பணிக்குழு  மற்றும் வட்டார அளவிலான பணிக்குழு அமைக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இக்குழு உறுப்பினர்களுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் மாதாந்திர ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

 

 

மாவட்டத்தில் ‘பெண் குழந்தைகள் காப்பாற்றுவோம், பெண் குழந்தைகள் கற்பிப்போம்’ திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சமூகநலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, நகராட்சி நிர்வாகம், பேரூராட்சிகள், மகளிர் திட்டம் ஆகிய துறைகளின் மூலமாக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பெண் சிறார் கல்வி முன்னேற்றம், பெண் சிசுக்கொலை தடுப்பு மற்றும் இளம்சிறார் திருமணம் தடுப்பு நடவடிக்கைள் மாவட்ட முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மகளிர் மாணவர் குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Thiruvannamalai is ranked 8th nationally in terms of female child birth

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெண் சிசுக்கொலை தடுப்பு நடவடிக்கையாக, குழந்தை பிறப்பதற்கு முன்னரே ஆணா? பெண்ணா? என்று கண்டறிபவர் மற்றும் சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்வோர் மீது  சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெண்குழந்தைகளை பாதுகாப்போம், கற்பிப்போம் என்கிற குறிக்கோளோடு மத்தியரசு கொண்டு வந்த திட்டத்தின் கீழ் 400-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் விழுப்புரம் - திருப்பதி பயணிகள் இரயிலில் ஒதுக்கப்பட்டிருந்த மூன்று பெட்டிகள் மூலமாக திருவண்ணாமலை முதல் வேலூர் வரை பயணம் மேற்கொண்டனர். அவர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமியும் சென்றார்.

 

Thiruvannamalai is ranked 8th nationally in terms of female child birth

 

பெண் குழந்தைகள் காப்பாற்றுவோம், பெண் குழந்தைகள் கற்பிப்போம் திட்டத்தை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரயிலில் பயணம் செய்த மாணவிகளுக்கு கொடி, தொப்பி, துண்டு பிரசுரங்களை வழங்கினார். மாணவிகளுக்கு காலை, மதியம் உணவும், பிஸ்கட் மற்றும் குடிதண்ணீர் வழங்கப்பட்டது. வேலூர் சென்றடைந்த மாணவிகள் அங்கிருந்து ஏற்பாடு செய்யபாட்டிருந்து சிறப்பு பேருந்துகளில் வேலூர் கோட்டை, அருங்காட்சியம், அமிர்தி விலங்கியில் பூங்கா ஆகிய இடங்களுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் அழைத்து செல்லப்பட்டனர், மீண்டும் மாலை திருவண்ணாமலை வந்தடைந்தனர்.

 

இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் சிறப்பான மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான விருது தேசிய பெண் குழந்தைகள் தின விழா 2019 ஜனவரி 24-ம் தேதி டெல்லியில் கொண்டாடப்படுகிறது. அந்த விழாவில் திருவண்ணாமலை மாவட்டத்துக்கான விருதை ஆட்சியர் கந்தசாமி பெறுகிறார்.

 

 

 

சார்ந்த செய்திகள்