தமிழ்நாட்டில் கரோனா நோய் பரவல் தற்போது கணிசமாக குறைந்துவந்தாலும், நோய் தாக்கம் என்பது முழுமையாக குறையாமல் நீடித்துவருவதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்தளர்வுகளுக்கு முன் 15 நாட்கள் அரசு மதுபானக் கடைகளை முழுமையாக மூடிய தமிழ்நாடு அரசு, கடந்த 14ஆம் தேதி முதல் தளர்வுகள் அறிவித்துள்ள குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் மதுக்கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.
கரோனா நோய் குறைந்துவந்த நிலையில், மதுக்கடைகளை மீண்டும் திறந்தால் நோய் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதால் மதுக்கடைகளை உடனடியாக மூட வலியுறுத்தியும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இன்று (17.06.2021) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக திருச்சி பாமக சார்பில் ஒவ்வொருவருடைய இல்லங்களிலும் ஆர்ப்பாட்டத்தை நடத்தி தங்களுடைய எதிர்ப்பை அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர். அரசு மதுக்கடைகளை மூட வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பியும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.