பிரதமர் மோடியின் பிறந்த நாளை தமிழக பாஜகவினர் கடந்த 17ஆம் தேதி சென்னையில் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மோடியின் 70வது பிறந்த நாளுக்காக தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் 70வடி நீள கேக் வெட்டி, மதூரவாயில் மேம்பாலம் அருகே புதிதாக 70 அடி உயரத்திற்கு புதிதாக ஒரு கொடி கம்பத்தை அமைத்து அதில் கொடி ஏற்றினார். சென்னை பாண்டிபஜாரில் பா.ஜ.கவின் கலை இலக்கிய அணி சார்பில் மோடியின் சாதனைகள் டிஜிட்டலில் திரையிடப்பட்டது. அங்கிருந்து சாரட்டு வண்டியில் பெரும் பட்டாளத்துடன் எல்.முருகன் யாத்திரை சென்றார். இதில் பா.ஜ.கவின் தொண்டர்கள் உயர்மட்ட நிர்வாகிகள் பலர் பாடல், நடனம் என உற்சாகமாக இருந்தனர். இது தவிர அவர் சென்ற வழி முழுக்க பேனர்களை வைத்திருந்தனர்.
ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், பொது இடங்களில் அதிகமானோர் கூடியது தொடர்பாக மாம்பலம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பிரபாகரன், மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, பாஜக மாநில தலைவர் எல்.முருகன், மாநில துணைத்தலைவர் எம்.என்.ராஜன், மாநிலபொதுச் செயலாளர் கரு. நாகராஜன் உள்ளிட்ட 106 பேர் மீது சட்ட விரோதமாக கூடுதல், பேரிடர்மேலாண்மைச் சட்டம், தொற்றுநோய் பரப்பும் வகையில் நடந்துகொள்ளுதல் உட்பட 5 பிரிவுகளின்கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். மேலும், அனுமதியின்றி விளம்பர பேனர்கள் வைத்ததாக தனித்தனியாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.