Skip to main content

விவசாயிகளுக்கான 'பிரதமரின் கிசான் சம்மன் நிதி உதவி' முறைகேடு! மேலும் 10 பேர் பணி நீக்கம்! ரூ.4 கோடி பறிமுதல்!

Published on 02/09/2020 | Edited on 02/09/2020

 

PM Kisan scheme scam

 

 

கடந்த 2018-ஆம் ஆண்டு பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டம் தொடங்கப்பட்டது. இதன்மூலம் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6000 நிதி உதவி,  2000 ரூபாய் என மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது.

 

அதேசமயம் இந்த திட்டம் ஒருசிலருக்கு மட்டுமே செயல்படுத்தப்படுவதாகவும் பல விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை எனவும் புகார்கள் எழுந்ததையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் பயனாளிகளை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக மாவட்டவட்டார அளவிலான வேளாண்துறை அதிகாரிகள் பயனாளிகளை தேர்வு செய்யலாம் என விதிமுறை திருத்தப்பட்டது. அதற்காக அந்தந்த பகுதி வேளாண்துறை அதிகாரிகளுக்கு ரகசிய பாஸ்வேர்டும் வழங்கப்பட்டது. வேளாண்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட வலைதள ரகசிய குறியீட்டு எண்களை மோசடி பேர்வழிகள் திருடி விவசாயிகள் அல்லாத 

நபர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பயனாளிகளாக இத்திட்டத்தில் பதிவேற்றம் செய்துள்ளனர். அதையடுத்து பலரது கணக்குகளில் 2000 ரூபாய் முதல் தவணையாக 3 மாதங்களுக்கு முன்பு வரவு வைக்கப்பட்டுள்ளது

 

கடந்த ஜுலை மாதம் 10-ஆம் தேதி இத்திட்டத்தில் 6-ஆவது தவணை தொகையான ரூபாய் 17, 500 கோடியை பிரதமர் மோடி விடுவித்தார். அப்போது மோசடியாக சேர்க்கப்பட்டவர்கள் வங்கி கணக்கில் இரண்டாவது தவணை தொகை ரூபாய் 2000 வரவு வைக்கப்பட்டது

 

இந்த திட்டத்தில் கடலூர், விழுப்புரம், வேலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் விவசாயிகள் அல்லாதவர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு பெயர்கள் முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில்  இந்தத் திட்டத்தில் 1.79 லட்சம் விவசாயிகள் சேர்க்கப்பட்டு பயன்பெற்று வரும் நிலையில் கடந்த சில மாதங்களில் புதிதாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சேர்க்கப்பட்டுள்ளனர்இவர்களுக்கும் சமீபத்தில் வங்கி கணக்கில் முதல் தவணையாக 2000 ரூபாய் பணமும் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் கோடிக்கணக்கான ரூபாய்கள் முறைகேடாக பல்வேறு நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது

 

கடலூர் அடுத்த காரைக்காடு ஊராட்சிக்குட்பட்ட பிள்ளையார்மேடு பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நிலம் இல்லாதவர்கள் விவசாயிகளாக பெயர்கள் சேர்க்கப்பட்டு தவணைத் தொகையும் வழங்கப்பட்டுள்ளதாக கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு புகார்களும்மாவட்டம் முழுவதிலும் பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததையடுத்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு நடைபெற்று வருகின்றன.

 

அதன்படி வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை மற்றும் காவல் துறை இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

கடலூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட 80 ஆயிரத்து 752 பேரில் 40 ஆயிரம் பேர் கடலூர் மாவட்டத்தை சார்ந்தவர்கள் என்றும்,  40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திருவள்ளூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது. இதில் கடலூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்ட 40 ஆயிரம் பேரில் 4 ஆயிரம் பேர் மட்டுமே உண்மையான பயனாளிகள் என்ற அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.  

 

எனவே முறைகேடாக சேர்க்கப்பட்டவர்களை பட்டியலில் இருந்து நீக்கி அவர்களின் வங்கி கணக்குகளும் உடனடியாக முடக்கப்பட்டுள்ளனஅடுத்த கட்டமாக போலி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் அரசு செலுத்திய பணத்தை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாவட்டத்திலுள்ள 226 வங்கி கிளைகளில் தலா ஒரு அலுவலர் நியமிக்கப்பட்டு போலி பயனாளிகளின் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை மாவட்ட ஆட்சியரின் பொதுக்கணக்குக்கு மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 26ஆம் தேதி முதல் நேற்று வரை சுமார் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

அதேபோல் பிற மாவட்ட பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் இருந்தும் ரூபாய் 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு ஆட்சியரின் பொது கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. வங்கி கணக்கிலிருந்து பி.எம்.கிஸான் பணத்தை எடுத்தவர்களிடம் தொகையைத் திரும்ப பெற வருவாய் மற்றும் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் போலி பயனாளிகளின் வங்கிக்கணக்கில் திட்ட நிதி செலுத்தப்பட்டு அவர் அதனை எடுத்திருந்தால் அவரது மற்றொரு வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

இதனிடையே கடலூர் மாவட்டத்தில் முதல்கட்டமாக ஆத்மா திட்டத்தில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களான கம்மாபுரம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பாக்கியராஜ், நல்லூர் வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர் சரவணன் மற்றும் கீரப்பாளையம் வட்டாரத்தில் பயிர் காப்பீட்டுத் திட்ட தற்காலிக பணியாளர் சுந்தர்ராமன் ஆகியோர் ஏற்கனவே பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் மேலும் 10 தற்காலிக ஊழியர்களை பணிநீக்கம் செய்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சகாமுரி உத்தரவிட்டுள்ளார்மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்த அரசுத்துறை அதிகாரிகள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்