சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்ததையடுத்து, இந்த புகாரை 4 பேராசிரியர்கள் கொண்ட குழு விசாரணை நடத்தும் என்று மருத்துவக் கல்லூரி இயக்ககம் அறிவித்துள்ளது.
ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்ந்தது குறித்து உயர்மட்ட குழு விசாரணை நடத்தும் என்று மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் ஆள்மாறாட்டம் குறித்து அனைத்து ஆவணங்களையும் காவல்துறையிடம் வழங்கியுள்ளோம் என்று மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு தெரிவித்துள்ளார். அதே சமயம் நீட் தேர்வு எழுதிய நபர் மற்றும் மருத்துவ கல்லூரியில் பயின்று வரும் நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஏற்கனவே மாணவர் உதித் சூர்யா மன உலைச்சல் காரணமாக மருத்துவ கல்லூரியில் இருந்து விலகுவதாக கடந்த திங்கள்கிழமை அன்று தேனி மருத்துவ கல்லூரிக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என்று நாராயணபாபு கூறியுள்ளார்.
நீட் தேர்வு எழுதிய நபரும், கல்லூரியில் பயின்ற நபரும் வெவ்வேறு நபர் என்பது நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சம்மந்தப்பட்ட மாணவர் நீக்கப்படுவார் என்று உறுதியாக தெரிவித்துள்ளது மருத்துவ கல்வி இயக்ககம். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளும் மாணவர் சேர்க்கை குறித்து மீண்டும் மறு ஆய்வு செய்யுமாறு மருத்துவ கல்வி இயக்குனர் நாராயணபாபு அறிவுறுத்தியுள்ளார். சென்னையைச் சேர்ந்த உதித் சூர்யா +2 முடித்து 3 ஆண்டுகளுக்கு பிறகு தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.