உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்த நிலையில், மறைமுகத் தேர்தல் நாளை (11.01.2020) நடைபெறவுள்ளது.
இந்நிலையில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியை கைப்பற்றும் முயற்சியில் அதிமுக, திமுக கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக கவுன்சிலர்களை தங்கள் பக்கம் தக்க வைக்கும் நடவடிக்கையில் இரு கட்சிகளும் ஈடுபட்டு வருகிறார்கள்.
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர். இந்த பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 16 வார்டுகள் உள்ளன. இதில் 8 வார்டுகளை திமுகவும், 6 வார்டுகளை அதிமுகவும், மீதமுள்ள ஒரு வார்டில் தேமுதிகவும், மற்றொரு ஒரு வார்டில் அமமுகவும் வெற்றி பெற்றனர். அதிக வார்டுகளில் திமுக வெற்றி பெற்றதால், அக்கட்சி யூனியன் தலைவர் பதவியை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது.
மேலும் அமமுக கட்சியைச் சேர்ந்த கவுன்சிலரின் ஆதரவையும் திமுக பெற்றது. இந்த நிலையில் தான் திமுக கவுன்சிலர் செல்வத்திடம் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் பேசி சென்னைக்கு அழைத்து சென்று ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைய வைத்தனர். இதனால் திமுகவும், அதிமுகவும் எட்டு கவுன்சிலர்கள் என சம பலத்துடன் இருக்கிறார்கள்.
திமுக கவுன்சிலர் செல்வம் போல் மற்றொரு கவுன்சிலர்களையும் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஈடுபட்டு வருவதால், பெரியகுளம் ஒன்றிய தலைவர் பதவியை ஆளுங்கட்சி தக்க வைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.