அகில இந்திய அளவில் சி.பி.எஸ்.இ பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடத்தப்படுமா, ரத்து செய்யப்படுமா என்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதுகுறித்து கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது பற்றி 13 சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் இன்று (05.06.2021) காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடைபெறுகிறது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஏற்கெனவே ஆலோசனை நடந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் பகல் 12 மணிக்கு இந்த ஆலோசனை நடைபெற இருக்கிறது.
பிளஸ் 2 தேர்வு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடமும் கருத்து கேட்டுள்ளார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அனைத்து தரப்பு கருத்துக்களின் அடிப்படையில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவது பற்றி உரிய முடிவெடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஆலோசனையில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்பார் எனவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் சார்பில் செல்வபெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் எஸ்.எஸ். பாலாஜி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். பின்னர் முதலமைச்சருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். அதன்பிறகு பள்ளிக் கல்வி அதிகாரிகளுடன் இறுதி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு இன்று மாலை அல்லது நாளை 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.