Skip to main content

பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்று பைகள் விற்பனை மையத்தை உருவாக்கிய நகராட்சி...

Published on 02/01/2019 | Edited on 02/01/2019
plastic free



தமிழக சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை 01.01.2019 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. மேற்காண்ட அறிவிப்பினைச் செயல்படுத்த, அரசாணை எண். 84, சுற்றுச்சூழல் – வனத்துறை நாள் 25.06.2018-ல் ஆணைகள் வெளியிடப்பட்டது.


தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் இதர சங்கப் பிரதிநிதிகளுடன் 14.11.2018 அன்று கூட்டம் நடத்தப்பட்டு, அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் மற்றும் பதில்கள் அளிக்கப்பட்டன. தடைசெய்யப்பட்ட, ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு ஏற்ப மாற்றுப்பொருட்கள் பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, உணவகங்கள், திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், டாஸ்மாக் மற்றும் பார் உரிமையாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்தாய்வுக் கூட்டங்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டன.


அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பள்ளி மாணவர்களின் பங்களிப்புடன் ஒருமுறை உபயோகப்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், சூழல் மன்றங்கள் மற்றும் தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தமிழ்நாட்டிலுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்தாய்வு கூட்டங்கள், விழிப்புணர்வு பேரணிகள் மாவட்டந்தோறும் நடத்தப்பட்டன.


இதைத் தவிர மாநிலம் முழுவதிலும் உள்ள பெரிய தொழிற்சாலைகள் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடை செய்வது குறித்த அரசாணையை பின்பற்றுமாறும் மற்றும் தொழிற்சாலை வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அறிவுறுத்தப்பட்டது.


தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 45 சுங்கச்சாவடிகளில், தடை செய்யப்பட்ட ஒருமுறை உபயோகித்து தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த அறிவிப்பு பதாகைகள் நிறுவப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வு பிரச்சார ஊர்தி துவக்கி வைக்கப்பட்டது. இந்த ஊர்தி மூலம் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.


தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பொது இடங்களில் தூக்கி எறியாமல் உள்ளாட்சி அமைப்புகள் அல்லது பதிவு செய்யப்பட்ட மறுசுழற்சி நிறுவனங்களிடம் ஒப்படைப்பதன் மூலம் பாதுகாப்பான முறையில் மறுசுழற்சி செய்ய வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


2019 டிசம்பர் 1ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் தடை நடைமுறைக்கு வந்துள்ளது. பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் மாற்று ஏற்பாடாக துணிப்பைகள், பாக்குமட்டை தட்டுகள், மண் சொப்புகள் போன்றவற்றை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டுமென திருவண்ணாமலை நகராட்சியின் சார்பில் மகளிர் குழுக்கள் மூலமாக ஒரு விற்பனை நிலையத்தை தொடங்கிவைத்துள்ளனர். இதில் சணலாலான பைகள், துணிப்பைகள், காகிதபைகள் விற்பனை நடக்கிறது என்பது குறிப்பிடதக்கது. 

 
இதுபோன்ற விற்பனை மையங்களை மாவட்டத்தில் பலயிடங்களில் திறக்க முயற்சி எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

 
 

 

சார்ந்த செய்திகள்