தென்காசி மாவட்டம் சின்னக்கோவிலான்குளம் காவல் சரகத்திற்குட்பட்ட ஆண்டார்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாசையா. விவசாயியான இவரின் மகள் கௌரி. தென்காசியிலுள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் படித்து வருபவர். அதே கிராமத்தைச் சேர்ந்த தாசையாவின் உறவினர் குடும்பத்தைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். உறவினர் என்பதால் மனோஜ்குமார் தாசையாவின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்திருக்கிறார். இதனால் அவருக்கும் தாசையாவின் மகளுக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாகியிருக்கிறது. இருவரும் மனமொத்த காதலரானார்கள்.
இச்சூழலில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதலர்கள் ஓடிச் சென்று திருமணம் செய்து கொள்ளலாம் எனத் திட்டமிட்டு வெளியேறிச் சென்றபோது, ஆத்திரமான தாசையா இது குறித்து சின்னக்கோவிலான்குளம் போலீசில் புகார் செய்திருக்கிறார். கௌரி வயது 17 நிரம்பியவர் மைனர் பெண் என்பதால் சின்னக்கோவிலான்குளம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மனோஜ்குமாரைக் கைது செய்தனர்.
இதனிடையே கௌரிக்கு வயது 17 போய் 18 கடந்ததால் மேஜர் ஆனார். தங்களது மகளைக் கல்லூரிக்கு அனுப்பி வைப்பதற்காகப் பெற்றோர் அவளுடன் தென்காசி பேருந்து நிலையம் வந்தனர். இதனிடையே காதலர்கள் இருவரும் தென்காசியில் இருந்து தப்பி விடலாம் என்று திட்டமிட்டதாகத் தெரிகிறது. மேலும் கௌரியே, மனோஜ்குமாரை தென்காசி வரும்படி அழைத்ததாகவும் பேசப்படுகிறது. திட்டப்படி மனோஜ்குமாரும் தயாராகத் தென்காசி வந்திருக்கிறார். கௌரியும் அவரது பெற்றோரும் பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தொலைவு நடந்து வந்தபோது மனோஜ்குமாரும் அவரது நண்பர்கள் 4 பேர் உட்பட வந்த கார் ஒன்று அவர்கள் எதிரே வந்து நின்றதும் ஓடிச்சென்று கௌரியே அதில் ஏறிக் கொண்டார். அவரை ஏற்றிக் கொண்ட கார் மின்னலாய் பறந்தது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தாசையா கீழே விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. தகவல் சென்று பரபரப்பான தென்காசி இன்ஸ்பெக்டர் பாலமுருகன், காதலர்கள் பறந்து சென்ற காரை தேடி வந்திருக்கிறார். தென்காசி சுற்று வட்டாரக் காவல் நிலையங்கள் அலர்ட் செய்யப்பட, போலீசார் எல்லைப்புற பகுதிகளில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். தவிப்பும் பதற்றமுமான சூழல். இதனிடையே சேர்ந்தமரம் போலீசாரும் வாகனத்தில் சேஸ் செய்திருக்கிறார்கள். சுரண்டைச் சாலையில் வந்த காரிலிருந்த நான்கு பேர் போலீஸ் சோதனையைக் கண்டு மிரண்டு போய் காரை நிறுத்தாமல் தப்பியபோது, சேர்ந்தமரம் போலீசார் அந்தக் காரை விரட்டி இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் காரில் இருந்த 4 பேரும் வயல் வெளிப்பக்கம் காரை நிறுத்தியவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடியிருக்கிறார்கள். அவர்களை காடுமேடு என மூன்று மணி நேரம் மூச்சிரைக்கத் துரத்தலுக்குப் பின்பு வளைத்த போலீசாரிடம் நாங்க அவனில்லை என்று தெரிவிக்க சப்பென்று போனது போலீசுக்கு. அல்வா கொடுத்த காதலர்கள் பறந்து செல்ல. வெறுங்கையுடன் திரும்பி இருக்கிறார்கள் போலீசார்.