இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருப்பூர் தொகுதி எம்.பி. திருப்பூர் சுப்பராயன் தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதத்தில்,
"சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் வெளிமாநில, வெளிமாவட்டத் தொழிலாளர்களுக்கு (Migrant workers) அவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்துதர வேண்டும் என தமிழக அரசு உள்துறை செயலாளரை கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்ட அவர் மேலும் “சென்னையில் 40 சமூக நல கூடங்களில் 6000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் (Migrant Workers) தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களை சொந்த ஊருக்குச் செல்லுமாறு மாநகராட்சி அதிகாரிகள் நிர்பந்தம் செய்வதாக செய்திகள் வருகின்றன.
சென்னை பெருநகர மாநகராட்சி துணை ஆணையர், அவர்களை வலியுறுத்தவில்லை என்றும், விருப்பப்பட்டால் போகலாம் என்றுதான் கூறியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு நகரங்களில், தமிழ்நாட்டு தொழிலுக்கும், மாநில மேம்பாட்டுக்கும் தமது உழைப்பை செலுத்திய அவர்களை, இந்த இக்கட்டான நேரத்தில் இன்னும் கௌரவத்துடன் அவர்களை தமிழக அரசு கையாள வேண்டும். அன்றாடம் உழைத்து அதன்மூலம் கிடைக்கும் ஊதியத்தில் வாழ்ந்துவந்த இவர்கள் கையிலிருந்த பணம் கரைய, கரைய மாநகராட்சியின் நிவாரண மையங்களை நோக்கி நாடிவருவது இயல்பானதாகும். எனவே, தமிழகத்துக்குள் அவர்களுடைய சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் தொழிலாளர்களுக்கு இலவசமாக போக்குவரத்து வசதியை செய்துதர தமிழக அரசு முன்வரவேண்டும்.
அதேபோல் வெளிமாநிலங்களில் இருந்து வந்துள்ள தொழிலாளர்கள், தமது சொந்த ஊருக்குச் செல்ல விரும்பினால் அதற்கும் மாநில அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். முன்னெப்போதும் கண்டிராத ஒரு கொடூரமான சூழலில் மத்திய அரசிடம் தயங்காமல் பேசி, இந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காகவே ரயில்களை இயக்க மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதோடு, புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இதுவரை வழங்க வேண்டிய மொத்த ஊதியத்தையும் உடனடியாக அரசு பெற்றுத்தர வேண்டும்" எனக் கூறியுள்ளார்.