தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், 2023 - 2024 கல்வி ஆண்டுக்காக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படவிருந்தன. அதே சமயம், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் வகுப்பறைகளில் அமர்வது கடும் சிரமம் என்று 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார்.
தொடர்ந்து வெயிலின் தாக்கம் குறையாததால் அமைச்சர் அன்பில் மகேஸ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட உத்தரவில், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதியும் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 14 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வரும் கல்வியாண்டில் சனிக்கிழமைகளிலும் பாட வகுப்புகளை நடத்த திட்டம் இருப்பதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்படுவதால் ஒரு பாடத்திற்கு 4 மணி நேரப் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மாணவர்களுக்கு பாடச் சுமை ஏற்படாதவாறும், ஆசிரியர்கள் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாதவாறும் சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.