6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் சிரமத்தை கருத்தில்கொண்டு ஜனவரி 19 ஆம் தேதி வரை போராட்டம் வாபஸ் பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அரசு மாற்று நடவடிக்கை எடுத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் சிஐடியு, அண்ணா தொழிற்சங்கம், ஏ ஐ டி யு சி உள்பட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பஸ் இயக்கிய ஊழியர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அதேபோல் கோபி, அந்தியூர், சத்தியமங்கலம் பகுதியிலும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை சத்தியமங்கலம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து ஈரோடு பஸ் நிலையத்தில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் கண்டன கோஷம். அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் ஜீவா ராமசாமி, அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் மாதையன் உள்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் நிர்வாகிகள் திடீரென ஈரோட்டில் இருந்து கோவை சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அடுத்து டவுன் டி.எஸ்.பி. ஆறுமுகம் தலைமையிலான போலீசார் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான தொழிற்சங்கத்தினரை கைது செய்தனர்.