இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்களுக்கு செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து முன்களப்பணியாளர்களான வருவாய்த்துறை, காவல்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பத்திரிக்கைத் துறையைச் சேர்ந்தவர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன. தடுப்பூசி குறித்து உலகம் முழுவதும் பல்வேறு வதந்திகளும் பரவி வருகின்றன. அந்த வதந்திகள் மக்களிடம் பயத்தை உருவாக்கியுள்ளன.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசிகள் முதல் கட்டமாக 1,150 சுகாதாரப் பணியாளர்கள் போட்டுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து மக்களிடம், பிற துறை அதிகாரிகளிடம் உள்ள பயத்தைப் போக்கும்விதமாக, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவன்அருள், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் விஜயகுமார் இருவரும், பிப்ரவரி 3ஆம் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இரண்டாம் கட்டமாக தொடங்கியுள்ள இந்த தடுப்பூசி போடும் நிகழ்வில், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் மட்டும் 45 அலுவலர்கள் போட்டுக்கொண்டனர். நாளை (05.02.2021) முதல் மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள அலுவலர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திப் நந்தூரி திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் என்பது குறிப்பிடதக்கது.