Skip to main content

அடுத்து பெட்ரோல் லைன்.. வேதனையில் விவசாயிகள்!

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

 

எட்டு வழி சாலையாகட்டும், உயர் மின் கோபுரங்கள், கெயில் குழாய் பதிப்பு அடுத்து பாரத் பெட்ரோலிய நிறுவனம் அமைக்கும் குழாய்கள் என எல்லாமே விவசாய விளை நிலங்கள் வழியாகவே கொண்டு செல்லும் திட்டத்தை தான் அரசு செயல்படுத்துகிறது. இதனால் விளை நிலங்களை பறிகொடுக்கும் விவசாயிகள் கதறிக்கொண்டே இருக்கிறார்கள்.

 

p

 

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே விளை நிலங்கள் வழியாக பாரத் பெட்ரோலிய குழாய்கள் அமைப்பதால் அதில் பாதிக்கப்படும் விவசாயிகள் சார்பில் கிராம குழு கூட்டம் இன்று நடைபெற்றது. சாலை ஓரங்களில் மட்டுமே குழாய்கள் அமைக்க வேண்டும் என்ற  தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

 

கோவை இருகூர் முதல் கர்நாடக மாநிலம் தேவணகொந்தி வரை பாரத் பெட்ரோலிய நிறுவனம் குழாய்கள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துகிறது.   இதனால் பாதிக்கப்படும் விவசாயிகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் சென்னிமலை அருகே ஒட்டவலசு என்ற கிராமத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு, பாதிக்கப்படும் விவசாயிகள் அமைப்பை சேர்ந்த ரவி, கி.வே.பொன்னையன், ஜெயபிரகாஷ், தெய்வசிகாமணி, அழகுமலை பாலசுப்பிரமணியம் ஆகியோர் ஏற்பாடு செய்தனர். 

 

 கூட்டத்தில், விவசாயிகள் நிறைவேற்றிய  தீர்மானங்கள் :

*கோவை இருகூரிலிருந்து திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 6 மாவட்டங்களில் விளை நிலங்கள் வழியாக கர்நாடக மாநிலம் தேவணகொந்தி வரை ஐ.டி.பி.எல் என்ற பெயரில் பாரத் பெட்ரோலிய நிறுவனம் குழாய்கள் அமைக்க பணிகள் நடைபெறுகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு தங்களின் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடுகிறது. அகவே  சாலை ஓரங்களில் மட்டுமே இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


 
*பாதிக்கப்படும் விவசாயிகளுக்காக பொதுமக்களின் ஆதரவை திரட்டுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.  விவசாயிகள் மேற்கொள்ளும் போராட்டங்களில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி தலைமை தாங்குவார் என்றும் அறிவித்தனர்.

இந்த கூட்டத்தில் ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இருந்து ஏராளமான  விவசாயிகள் கலந்து கொண்டனர்.
 

சார்ந்த செய்திகள்