அரியலூர் மாவட்டத்தைப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து, விவசாய கடன்கள் முழுவதையும் தள்ளுபடி செய்து, வாழ்வாதாரம் காக்க நெற்பயிருக்கு ஏக்கருக்கு 50 ஆயிரம் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை தமிழக அரசுக்குப் பரிந்துரை செய்ய அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநில தலைவர் தங்க சண்முகசுந்தரம் தலைமையில் வழங்கிய மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘டெல்டா பகுதியான அரியலூர் மாவட்டத்தில் திருமானூர் டி.பழூர் ஒன்றியம் மட்டுமல்லாமல் செந்துறை, ஆண்டிமடம், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி என மாவட்டத்தில் பல பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிறு வகைகள், மக்காச்சோளப் பயிர்கள், கடலை, உளுந்து, கம்பு, கேழ்வரகு, சோளம், முந்திரி, முதலிய பயிர்கள் அனைத்தும் பல இலட்சக்கணக்கான ஏக்கர்கள் பாதிப்படைந்துள்ளன. மேலும் தொடர் கனமழையால் டி.பழூர், திருமானூர், செந்துறை, ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் பெய்த கனமழையால் அறுவடைக்குத் தயாரான நிலையில் இருந்த நெற்பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதில் விவசாயிகளுக்கு நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையாக வழங்குவது என்பது ஏற்புடையதாக இல்லை. விவசாயிகள் பலர், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பெய்த கனமழையால் நெற்பயிர்கள் அழுகிய நிலையில், மீண்டும் நடவு செய்து இரட்டிப்பு செலவு செய்துள்ளனர். எனவே ஏற்கெனவே பயிர்கள் அழுகி நஷ்டமடைந்த நிலையில் மீண்டும் நடவு செய்தும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அதனையும் கணக்கில் கொண்டு அவர்களுக்கும் முறையான நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
எனவே வெயில், மழை, பனி, புயல், பேரிடர், வறட்சி என்று பல்வேறு சோதனைகளைக் கடந்து தொடர்ந்து விவசாயிகள் படும் துயரங்களைச் சொல்லி மாளாது. விதைச் செலவு, பயிர் நடவு, செலவு பயிர்கள், பராமரிப்புச் செலவு, உரச்செலவுகள், அறுவடைக் கூலி உயர்வு என பலவகைகளில் பாதிக்கப்பட்டும், விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் நிலையை உயர்த்துவதற்கு எந்தவித திட்டங்களும் இல்லாதது அனைத்து விவசாயிகள் மத்தியிலும் மன உளைச்சலுக்கு ஆளாவதுடன், தொடர்ந்து வாழ்வாதாரத்தை இழந்து கடும் நஷ்டத்தைச் சந்தித்து வருவது வருத்தமளிக்கின்ற செயலாகவே உள்ளது.
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்று கார்ப்பரேட் கம்பெனிகள் கோரிக்கை வைக்கும்போது, அரசு உடனடியாக களம் இறங்கி துயர்துடைக்க நடவடிக்கை எடுப்பது போல விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே விவசாயத்தை நம்பியுள்ள அனைத்து தொழில்களும் முடங்கும் பேரபாயம் உள்ளதையும் கருத்தில் கொண்டு, விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டு நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு 50 ஆயிரம் இழப்பீட்டுத் தொகையாக வழங்க தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என அனைத்து விவசாயிகள் சார்பில் அரியலூர் மாவட்ட ஆட்சியராகிய தங்களிடம் மனு அளிக்கின்றோம்.
மேலும் மிகுந்த வேதனையுடனும் மன உளைச்சலுடனும் விவசாயிகள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் விவசாயிகள் பயிர் செய்த கடலை, உளுந்து, பருத்தி, மிளகாய், மல்லி பாரம்பரிய நெல் ரகங்கள் என அனைத்துமே இயற்கைப் பேரிடரால் பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. டெல்டா பகுதிகளில் விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு, கஜா புயலை விட கடுமையான பாதிப்பு. எனவே தேசியப் பேரிடராக அறிவித்து டெல்டா விவசாயிகளின் துயரைத் துடைக்க, வங்கிகள் வாங்கிய கடனைக் கட்டுவதற்கு தரும் நெருக்கடியிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்றும் விதமாக உடனடி நடவடிக்கையாக விவசாயிகள் பெற்ற அனைத்து கடன்களையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் மூலம் அனைத்து விவசாயிகள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் அரியலூர் மாவட்டத்தைப் பேரிடர் பாதித்த மாவட்டமாக அறிவித்து அனைத்து விவசாயிகள் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்; அனைத்து பயிர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும்; நெற்பயிருக்கு ஏக்கருக்கு 50 ஆயிரம் வழங்கக் கோரி அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் தலைமையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க நிர்வாகி வேலுமணி, வெற்றியூர் கிராம விவசாயிகள் சங்க நிர்வாகிகள் காமராஜ், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் அறங்கோட்டை இராமலிங்கம், சின்னநாகலூர் பெரியநாகலூர் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பாண்டித்துரை, பழனிச்சாமி, மேலவரப்பன்குறிச்சி விவசாயிகள் சங்க நிர்வாகிகள் லெட்சுமிகாந்தன், குரு கார்த்திக், தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகி முடிகொண்டான் கணேசன், தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி செயலாளர் பிரகாஷ், தி.மு.க விவசாய அணி மனோகரன், மதிமுக விவசாய அணி சுதாகர் உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்க நிர்வாகிகள் ஆகியோர் அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.