தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி உள்ளிட்ட விவரங்களை வாக்குச்சாவடிகளின் முன் வைக்க உத்தரவிடக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள், கல்வித்தகுதி, தொழில் மற்றும் குற்றப் பின்னணி விவரங்களை வேட்புமனுவுடன் பெற்று, தேர்தல் ஆணையம் இணையதளத்தில் வெளியிடுகிறது. மக்கள் வாக்களிக்கும் வாக்குச்சாவடிகளின் முன், வேட்பாளர்களின் பெயர், முகவரி, கட்சி, சின்னம் ஆகியவை மட்டுமே வைக்கப்படுவதாகவும், தேர்தல் ஆணையம் பெறும் குற்றப்பின்னனி உள்ளிட்ட விவரங்களையும், வாக்குச்சாவடிகளின் முன் வைக்க உத்தரவிட வேண்டும் என, கல்வியாளர் முரளிதரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மணிக்குமார், நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, இது சம்பந்தமான தகவல்களை பெறுவதற்கு தேர்தல் ஆணையத்தின் தகவல் உரிமை சட்ட மேல்முறையீட்டு அமைப்பை அணுகாமல் மனுதாரர் உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தது.