அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்டார். இது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்போது ஆட்சியில் இருந்த அதிமுக அரசு சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், ஆளுநர் அதை திருப்பி அனுப்பிவிட்டார்.
இந்த நிலையில், திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழக அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு, நன்கு ஆராய்ந்து சட்டமன்றத்தில் நீட்டுக்கு எதிரான மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை 100 நாட்களுக்கு மேலாக வைத்திருந்துவிட்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவரின் விரிவான விளக்கங்களுடன் அவையின் மறுபரிசீலனைக்காக 01.02.2022 அன்று மீண்டும் தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பினார். அதன்பிறகு அனைத்தும் சரிசெய்யப்பட்டு நீட் தேர்வுக்கு எதிரான மசோதா மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது தற்போது குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ளது.
இதனிடையே அரியலூரில் புதிய மருத்துவமனை கட்டப்பட்டு வந்தது. கடந்த இரண்டாண்டுகளாக நடைபெற்ற இந்த பணியானது முடிக்கப்பட்டு இன்று மக்களுக்காக முதல்வர் ஸ்டாலின் அர்ப்பணித்தார். இந்த நிலையில், நீட் தேர்வை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தி தனது இன்னுயிர் நீத்த அனிதாவின் பெயர் அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அரங்கத்திற்கு சூட்டப்பட்டுள்ளது. ரூ. 22 கோடியில் 850 பேர் அமரக்கூடிய அளவில் ‘அனிதா நினைவு அரங்கம்’ அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 18 ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதன்முறையாக பேசிய உதயநிதி ஸ்டாலின், “நீட் ஒழிப்பு போராளி தங்கை அனிதாவின் பெயரை அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சூட்ட வேண்டும் என்று தங்கை அனிதாவின் சகோதரர் மணிரத்னம் உள்ளிட்ட அவரின் குடும்பத்தார் என்னிடம் வலியுறுத்தி வருகின்றனர். அப்படி அனிதாவின் பெயரை சூட்ட வேண்டும் என்பது என்னுடைய விருப்பமும் கூட.” என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.