கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகன் 26 வயது மணிகண்டன். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் பிரகாஷ். இவர் மணிகண்டனின் நண்பனும் கூட. இவர் சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு சிங்கப்பூரில் மணிகண்டனை பிரகாஷ் சந்தித்துப் பேசி உள்ளார்.
இந்த நிலையில் மணிகண்டன் அவர் தங்கி இருந்த இடத்திற்கு அருகில் தூக்கு மாட்டி இறந்து விட்டதாகச் சுற்றுலா சென்ற பிரகாஷ் ஃபோன் மூலம் மணிகண்டன் உறவினர்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு மணிகண்டனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதோடு மணிகண்டன் உடல் சிங்கப்பூரிலிருந்து அவர்கள் சொந்த கிராமத்திற்கு நேற்று வந்து சேர்ந்தது.
இந்நிலையில் மணிகண்டனின் உறவினர்கள் மணிகண்டன் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் மறியல் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மணிகண்டன் உறவினர்கள், மணிகண்டனின் இறப்பிற்கு காரணம் இங்கிருந்து அங்கு சென்ற மணிகண்டன் நண்பன் பிரகாஷ் தான் என்றும் வெளிநாட்டில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தான் மணிகண்டன் இறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். பிரகாஷை அழைத்து விசாரணை செய்தால் உண்மை வெளிவரும்; அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை வைத்தனர். போலீசார் பிரகாஷை அழைத்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். அதன்பிறகு சாலை மறியலை கைவிட்டு மணிகண்டனின் உறவினர்கள் கலைந்து சென்றனர். பிழைப்பதற்காக சிங்கப்பூருக்குச் சென்ற இளைஞருடன் நண்பனின் மூலம் இறப்பும் உடன் தேடிச் சென்றதோ? என்பது பிரகாஷை விசாரணை செய்த பிறகே தெரிய வரும் என்கிறார்கள் காவல்துறையினர்.