Skip to main content

நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை மிரட்டல் விடுத்த நபர்

Published on 16/11/2022 | Edited on 16/11/2022

 

Person made struggle in court

 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தின் அருகே உள்ளது மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம். நீதிமன்றத்திற்குள் செல்வதற்கு முன்பு உள்ள முகப்பில் மிகப்பெரிய அளவில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் சுமார் 30 அடி. நேற்று அதிகாலை 50 வயது மதிக்கத்தக்க ஒருவர், அந்த உயரமான சுவரின் மீது ஏறி நின்று தன் மீது பெட்ரோலை ஊற்றி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்தார். அந்தப் பகுதியில் பஸ் நிலையம் உள்ளதால் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும். அதன் காரணமாக இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கும், தீயணைப்பு அலுவலர்களுக்கும் தகவல் அளித்தனர்.

 

உடனடியாக விழுப்புரம் டவுன் டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து, தற்கொலை மிரட்டல் விடுத்த நபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர், தன் மீது போலீசார் பொய் வழக்குப் போட்டு கைது செய்ய முயல்வதாகக் கூறினார். எனினும், அவர் கீழே இறங்க மறுத்தார். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் ஏணி மூலம் சுவரில் ஏறி அரை மணி நேரம் போராடி அவரை கீழே கொண்டு வந்தனர். 

 

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் பாதிராப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்த சோலை என்பவரது மகன் அய்யனார் (50வயது) என்பது தெரிய வந்தது. அய்யனார் மீது திண்டிவனம், மயிலம் காவல் நிலையங்களில் ஏற்கனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் 2016ம் ஆண்டு நடந்த ஒரு வழக்கு தொடர்பாக மயிலம் போலீசார் அய்யனாரை விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளனர். அவர் விசாரணைக்கு வர மறுத்துள்ளார். இதனால் அவரிடம் இருந்த செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதை மீட்பதற்காகவும் தன் மீது உள்ள வழக்கை ரத்து செய்வதற்காகவும் நேற்று அதிகாலை மது போதையில் ஊரிலிருந்து விழுப்புரம் வந்த அய்யனார், நீதிமன்ற சுவரில் ஏறி நின்றுகொண்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார் என்பது தெரிய வந்தது. 

 

அவரை போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 
 

சார்ந்த செய்திகள்