வேலூர் சத்துவாச்சாரி பகுதி 3யைச் சேர்ந்தவர் முகிலன்(48). இவரது மனைவி பரிமளா. இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இவர் சத்துவாச்சாரி டபுல்ரோடு பகுதியில் கடந்த 6 வருடமாக தென்றல் எண்டர்பிரைசஸ் எனும் கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில் நண்பர் ஒருவர் இன்று கடையைத் திறந்து பார்த்த போது முகிலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு சடலமாக தொங்கியுள்ளார். இது குறித்து சத்துவாச்சாரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த சத்துவாச்சாரி காவல்துறையினர், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறப்பதற்கு முன் முகிலன் பெற்றோர், மனைவி, அண்ணி, நண்பன் என 12 பேருக்கு தனித்தனி கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் ஜெகதீசன் என்னிடம் பணத்தை வாங்கிக்கொண்டு நம்பவைத்து என்னை ஏமாற்றிவிட்டார். பணத்தைத் திரும்ப கேட்டதுக்கு எனக்கு கொலை மிரட்டல்கள் வந்தது. அதை நான் யாரிடமும் சொல்லவில்லை. அவர்கள் என்னைக் கொலை செய்யும் முன் நானே இறந்துவிடுகிறேன் என்னை மன்னித்துவிடுங்கள். "நான் இறந்த பிறகாவது இந்த அரசாங்கம் ஜெகதீசன் இடம் இருந்து பணத்தை மீட்டுக் கொடுக்கும் என்று இந்த முடிவை எடுக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
வேலூரில் செயல்பட்டு வந்த ஐஎம்எஸ் என்கிற நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக ஆசை காட்டி பல்லாயிரம் பேரிடம் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏமாற்றி பணத்தைப் பெற்றன. இதற்காக ஊருக்கு ஊர் ஏஜெண்டுகளை நியமித்திருந்தனர். ஆயிரம் கோடி அளவுக்கு பணம் வந்ததும் ஒரு நாள் மொத்த பணத்தையும் சுருட்டி கொண்டு அதன் பார்ட்னர்கள் தலைமுறை வாங்கிவிட்டனர். இது குறித்த வழக்கு மாநில பொருளாதார குற்றப்பிரிவு இடம் உள்ளது, இதன் நிறுவனர்கள் இதுவரை கைது செய்யப்படாமல் உள்ளனர்.
தற்கொலை செய்துகொண்ட முகிலன், ஏஜென்டிடம் ஒரு கோடி ரூபாய் வரை பணம் தந்து ஏமாந்ததாக கூறப்படுகிறது. அந்தப் பணம் வேறு சிலரிடம் வாங்கி தந்ததாக தெரிகிறது. இதற்கான எந்த ஆவணமும் இல்லை, ஏஜென்ட் ஆக முன் நின்று பணத்தை வாங்கிய ஜெகதீசன் பணத்தை திருப்பி தராமல் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாலே தற்கொலை செய்து கொண்டதாக அந்தக் கடிதம் மூலம் தெரியவருகிறது.
உயிரிழந்த முகிலன் எழுதிவைத்த கடிதங்களைக் கைப்பற்றிய காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.