தமிழகத்தில் கல்வி என்பது கொஞ்சம் கொஞ்சமாக வசதி படைத்தவர்களுக்கு மட்டும் என்கிற நிலைக்கு மாறிக்கொண்டிருக்கும் நிலையில் அது உண்மை தானோ என்பதை உறுதிபடுத்தும் வகையில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களே நியமிக்கப்படாமல் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மணப்பாறை அருகே உள்ள டி.சுக்காம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 வரை 560 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் மேல்நிலை வகுப்புகளான பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் மட்டும் 174 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். மேல்நிலை வகுப்புகளுக்கு வேதியியல், கணினி, உயிரியியல் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதனால் மாணவ, மாணவிகள் பாடங்களை படிக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். ஆசிரியர் வேண்டும் என பலமுறை மாணவர்கள் கேட்டும் அதற்கான எந்த விதமான ஏற்பாடுகளும் செய்யாமல் தலைமை ஆசிரியர் காலம் தாழ்த்தியே வந்தனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வு ஆரம்பம் ஆனாது. இந்த பள்ளியிலும் அதற்கான அறிவிப்பு வெளியாகி தேர்வு நாளும் வந்தது. தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வந்த பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ, மாணவிகள் திடீரென தேர்வை புறக்கணித்து பள்ளி மைதானத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோரும் போராட்டத்தில் ஈடுபட்டதை பார்த்த பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனால் பள்ளியில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவலறிந்ததும் மணப்பாறை மாவட்ட கல்வி அதிகாரி நிர்மலா, புந்தாநத்தம் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் மாணவ, மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால், அதற்கான உத்தரவை இப்பொழுதே அளித்தால் தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று மாணவர்கள் கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்தனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள் பின்னர் வகுப்புகளுக்குச் சென்று 1 மணிநேரம் கழித்து தேர்வெழுதினர்.
இந்த பிரச்சனையை படம் பிடிக்க சென்ற செய்தியாளர்களிடம் மாவட்ட கல்வி அதிகாரி நிர்மலா… சார்.. இது பள்ளிக்குள் நடக்கும் தனிப்பட்ட பிரச்சனை இதை ஏன் பெரிது பண்றீ்க என்று மிகவும் அலட்சியமாக சொல்லியிருக்கிறார்.
இதே போல மணப்பாறை பகுதியில் உள்ள மேலும் சில அரசு பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத நிலை இன்னும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது. இதை எல்லாம் கண்டறிந்து உடனடியாக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதே மாணவர்களின் நலன் கருதும் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.