வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் நளினியும், முருகனும் வீடியோ காலில் பேச அனுமதிக்கப்பட்டதாக சிறைத்துறை அளித்த விளக்கத்தை ஏற்று, நளினியின் தாயார் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்துவைத்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக உள்ள நளினி மற்றும் முருகன் ஆகியோரை லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையில் உள்ள முருகனின் தாயுடனும் வாட்ஸ் ஆப் வீடியோ மூலம் பேச அனுமதிக்க கோரி நளினியின் தாய் பத்மா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன் தலைமையிலான அமர்வு, தந்தை இறந்துவிட்ட நிலையில் தாய்க்கு ஆறுதல் கூற, சிறைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் அழைப்பை பதிவு செய்துகொள்ளும் வசதியுடன் பேச அனுமதிக்கலாம் என தெரிவித்து, இருவரையும் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேச அனுமதி அளித்து கடந்த ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்தது.
அந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் தமிழ்செல்வி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வேலூர் சிறை கண்காணிப்பாளர் தாக்கல் செய்த கடிதத்தில், உயர் நீதிமன்ற ஆணைப்படி, வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன், இருவரையும் வாட்ஸ்அப் வீடியோ காலில் பேச அனுமதி அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நளினியின் தாயார் பத்மா தொடர்ந்த வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.