சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடகா மாநிலம் பெங்களுரூ பார்ப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியும், அதிமுக பொதுச்செயலாளருமான சசிகலா, 4 ஆண்டுகாலம் தண்டனை முடிந்து வரும் ஜனவரி 27- ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறையில் இருந்து வெளியேவரும் சசிகலாவை வரவேற்க அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுக என்கிற தனிக்கட்சி தொடங்கியுள்ள டி.டி.வி.தினகரன் சில ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது. பெங்களுரூவில் இருந்து சென்னை வரை பிரமாண்டமான வரவேற்பு வழங்க ஏற்பாடுகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகரில் அமமுகவின் மா.செவும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பாலசுப்ரமணி தரப்பில் இருந்து, ஆம்பூர் காவல்நிலையத்தில் அமமுக சார்பில் இன்று ஒரு மனு தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த மனுவில் சிறையில் இருந்து விடுதலையாகி வெளியே வரும் சசிகலாவை வரவேற்க பேனர்கள் வைக்க அனுமதி வேண்டும் எனக்கேட்டு மனு தந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த மனுவை வாங்கிய போலீஸார் இதுக்குறித்து எஸ்.பி விஜயகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் காவல்துறை தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளார். உளவுத்துறை மூலமாக இது முதல்வர் எடப்பாடி கவனத்துக்கும் சென்றுள்ளது. சசிகலாவால் முதல்வரான எடப்பாடி அனுமதி தருவாரா? தரமாட்டாரா என கேள்வி எழும்பியுள்ளது.